நம்பிக்கையுடன் ரோகித் சர்மா

டெஸ்ட் தொடரில் நிலையான இடம் கிடைக்காமல் தடுமாறி வரும் ரோகித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், மூன்று அரைசதம் அடித்து, தொடர் நாயகன் விருது வென்றவர் ரோகித் சர்மா (24). இதனால் டெஸ்ட் அணியில் இவருக்கு எப்படியும், இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவருக்குப் பதில் அறிமுக வாய்ப்பு பெற்ற விராத் கோஹ்லி சொதப்பினார். பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ஒவ்வொரு முறை, தவறான "ஷாட்டுகளால்' ஆட்டமிழக்கும் போதெல்லாம், ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கின்றனர் என்ற கேள்வி எழுந்தது.

ஒருவழியாக தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை கிடைத்த வாய்ப்பை, கெட்டியாக பிடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது உறுதியாக தெரிகிறது. சசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 61 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்து, இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து இதேபோல சிறப்பாக செயல்பட்டு, ஒருநாள் போட்டிகளிலும் அசத்த, நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறியது:

பொதுவாக என்னிடம் என்ன தவறுகள் உள்ளன என்பதை மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்புவேன். இவ்வாறு சொல்வதை நாம் எளிதாக விட்டுவிட முடியாது. இதற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தேன். இது எளிதாக இருந்தா<லும், இத்தொடர் எனக்கு முக்கியமானதாக இருந்தது.


மனநிலை முக்கியம்:

இப்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. இங்கு ஏற்கனவே வந்துள்ளேன். இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து நன்கு தெரியும். முதலில் மனதளவில் நன்கு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என, மனநல நிபுணர் ஆப்டன் அறிவுறுத்தியுள்ளார். பின் நெருக்கடியான நிலையில் தெளிவான முடிவுடன் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.


உதவிய "மெஷின்':

இத்தொடருக்காக மைதானத்தில் போதிய பயிற்சி பெறவில்லை என்றாலும், "பவுலிங் மெஷின்' உதவியுடன் 5,000 முதல் 7,000 பந்துகளை சந்தித்து பயிற்சி எடுத்தேன். போட்டிகளில் இதுபோல் இருக்காது என்று நன்றாகத் தெரியும். இருப்பினும், மூன்று பயிற்சி போட்டிகளில் விளையாடியது நம்பிக்கை தந்துள்ளது.


ஏமாற்றம் இல்லை:

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக "மிடில் ஆர்டரில்' மட்டும் தான், இடம் காலியாக உள்ளது. இதற்காக இதுவரை 12 பேருக்கும் மேல் போட்டியிட்டு இருப்பர். சில ஆண்டுகளுக்கு முன், நாக்பூர் டெஸ்டில் எனக்கும் அறிமுக வாய்ப்பு கிடைத்து.

ஆனால் காயம் அடைந்ததால், தொடர்ந்து சாதிக்க முடியவில்லை. பின் ஒருநாள் தொடரின் போது சொதப்பினேன். இருப்பினும், ஏமாற்றம் அடையாமல் போராடியதால், மீண்டும் அணிக்கு திரும்ப முடிந்தது.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

0 comments:

Post a Comment