தொடரை இழந்தது இந்தியா: மழையால் ஆட்டம் டை

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, மழை காரணமாக "டக் வொர்த்த லீவிஸ்' முறைப்படி "டை' ஆனது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகித்தது.

நேற்று, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், நான்காவது போட்டி நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

டிராவிட் ஏமாற்றம்:

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது, பிராட் வேகத்தில் ரகானே (38) எல்.பி.டபிள்யு., ஆனார். பார்த்திவ் படேல் (27) சோபிக்கவில்லை. அடுத்து வந்த ராகுல் டிராவிட் (19), விராத் கோஹ்லி (16), சுவான் சுழலில் வெளியேறினர். இந்திய அணி, 110 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சூப்பர் ஜோடி:

பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. துவக்கத்தில் நிதானமாக ரன் சேர்த்த இந்த ஜோடி, பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய சுரேஷ் ரெய்னா, ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் 44வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 17வது அரைசதம் அடித்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி, பிரஸ்னன் வீசிய ஆட்டத்தின் 47வது ஓவரில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 40வது அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்த போது, ரெய்னா (84 ரன்கள், 2 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டானார்.

இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (71 ரன்கள், 3 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், சுவான் தலா 2, ஸ்டீவன் பின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பெல் அரைசதம்:

சற்று கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக் (12), கீஸ்வெட்டர் (12) ஜோடி மோசமான துவக்கம் அளித்தது. அடுத்து வந்த டிராட் (23) சோபிக்கவில்லை. பின் இணைந்த இயான் பெல், ரவி போபரா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த போது, பெல் (54) அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிய போபரா தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

சதம் நழுவல்:

அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (7) ஏமாற்றினார். டிம் பிரஸ்னன் (27) ஓரளவு ஆறுதல் அளித்தார். இங்கிலாந்து அணி 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் ஆட்டம் துவங்கியது. அபாரமாக ஆடிய போபரா (96) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சுவான் (31) நம்பிக்கை அளித்தார்.

மீண்டும் மழை:

இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை காரணமாக, "டக் வொர்த்த லீவிஸ்' முறைப்படி போட்டி "டை' என அறிவிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் ஆர்.பி. சிங் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ரெய்னா (இந்தியா)-போபரா (இங்கிலாந்து) இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. கார்டிப்பில், வரும் 16ம் தேதி இவ்விரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது.

0 comments:

Post a Comment