இந்திய அணியின் கெட்ட கனவு

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடர், இந்திய அணியின் கெட்ட கனவு,'' என, தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் (0-4), "டுவென்டி-20' (0-1), ஒருநாள் (0-3) தொடரை மோசமாக இழந்தது. இதன்மூலம் ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை இழந்தது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது: பி.சி.சி.ஐ., க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின், எனது தலைமையிலான தேர்வுக்குழு மீது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன.

ஆனால் என் மீதும், எங்கள் குழு மீதும் அதிக நம்பிக்கை வைத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), எனது தலைமையிலான தேர்வுக்குழுவை நீடித்தது. கடந்த காலம் பற்றி கவலைப்படாமல், இனிவரும் நாட்களில் இந்திய அணியின் வளர்ச்சிக்கு முழுவீச்சில் போராடுவோம்.

தற்போது எனது கவனம் முழுவதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து மண்ணில் கண்ட தோல்விக்கு பரிகாரம் தேடிக் கொள்ள முயற்சிப்போம்.

இதற்கு நிறைய நாட்கள் இருப்பதால், அதற்குள் சிறந்த அணியை உருவாக்கலாம். இத்தொடருக்கு முன், சொந்த மண்ணில் நடக்கவுள்ள இரண்டு முக்கிய தொடர்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இத்தொடர்கள், ஆஸ்திரேலிய பயணத்துக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என நம்புகிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில், முதல் முறையாக இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. எந்த ஒரு அணிக்கும் இதுபோன்ற சரிவுகள், சில நேரங்களில் வரத்தான் செய்யும். மோசமான தோல்விகள் குறித்து அதிகம் சிந்திக்காமல், அடுத்து வரும் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், விரைவில் இந்திய அணி எழுச்சி பெற்றுவிடும்.

இங்கிலாந்து பயணத்தை, இந்திய அணியின் கெட்ட கனவாக கருதுகிறேன். ஏனெனில் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி. இது இயற்கையாக நிகழக்கூடியது.

இதனை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அனைத்து போட்டிகளிலும் "டக்வொர்த்- லீவிஸ்' முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஒருநாள் தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் துரதிருஷ்டவசமானது.

எந்த ஒரு அணியும், "நம்பர்-1' இடத்தை எளிதில் அடைந்துவிடலாம். இதனை தக்க வைத்துக் கொள்வது கடினமான ஒன்று. இங்கிலாந்து அணி, முதலிடத்தை காப்பாற்ற கடினமாக போராட வேண்டும். அடுத்து வரும் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், விரைவில் மீண்டும் டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை அடையலாம்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

0 comments:

Post a Comment