அக்தரால் எப்போதும் தொல்லை தான்

அக்தர் அணியில் விளையாடிய போதும் சரி, ஓய்வு பெற்ற பின்பும் சரி, அப்போதும், இப்போதும் இவரால் தொல்லை தான்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் சோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், "கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டிராவிட் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்தியாவின் ஹர்பஜன் சிங், வினோத் காம்ப்ளி உள்ளிட்ட பலர் அக்தருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.


இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:

தனது வேகப்பந்து வீச்சைக் கண்டு சச்சின் பயந்தார் என அக்தர் தெரிவித்துள்ளார். இது முற்றிலு<ம் தவறானது. கடந்த 1989ல் சியால்கோட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் நடந்தது. இதில் சச்சின் திறமையை சொல்லியே ஆகவேண்டும். ஆடுகளத்தில் அதிகமாக புற்கள் இருந்தன. வக்கார் யூனிசும், நானும் மிகவேகமாக பவுலிங் செய்தோம்.


துணிச்சல் சச்சின்:

இதில் வக்கார் வீசிய பந்து, சச்சினின் முகவாய்கட்டையில் தாக்கியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார் சச்சின். சிகிச்சைக்குப் பின் மீண்டும் களமிறங்கிய இவர், அரைசதம் அடித்து அசத்தினார். அப்போது சச்சினுக்கு வயது 16. அவரிடம் எந்த பயமும் இல்லை. இந்நிலையில் சச்சின் பயந்தார் என அக்தர் எப்படி கூறுகிறார் என்று வியப்பாக உள்ளது.


எழுதப்படாத விதி:

அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை வீழ்ச்சிக்கு காரணம் அவர் தான் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஏன்? இந்த உலகத்துக்கே தெரியும். அக்தர் குறித்து நிறைய பேசலாம். ஆனால் அவரை மேலும் இழிவுபடுத்த விரும்பவில்லை. ஒருசில உண்மைகளை "மீடியாவுக்கு' தெரிவிக்கக்கூடாது என்பது, வீரர்கள் மத்தியில் உள்ள எழுதப்படாத விதி. இதை அக்தர் மீறிவிட்டார்.


எப்போதும் பிரச்னை:

இவரது கிரிக்கெட் வாழ்க்கையை நான் அழிக்க முயற்சித்தேன் என்கிறார். என்னைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) என்ன சொல்கிறதோ, அதைத் தான் நானும் செய்தேன். மொத்தத்தில் அக்தர் அணியில் இருக்கும் போதும் பிரச்னை தான். இப்போது ஓய்வு பெற்ற பின்பும் பிரச்னை தான்.


மீண்டும் சோதனை:

இங்கிலாந்தில் அடைந்த மோசமான தோல்விக்குப் பின், இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. இது தோனி அணிக்கு மற்றொரு சோதனை தான். ஏனெனில் இங்குள்ள ஆடுகளங்கள் நன்கு "பவுன்ஸ்' ஆகும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடப்பதற்கு, எப்போதும் நான் ஆதரவாகவே இருப்பேன்.

இவ்வாறு வாசிக் அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment