ஒருநாள் போட்டியில் மாற்றங்கள்

ஒருநாள் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க, பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டுமென இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் வலியுறுத்தியுள்ளார்.

"டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளது. இதையடுத்து புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என ஐ.சி.சி.,க்கு சச்சின் கடிதம் எழுதியுள்ளார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது:

டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வகையான கிரிக்கெட்டையும், சிறப்பான வகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து எனது எண்ணத்தில் தோன்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

* ஒருநாள் போட்டிகளில் தலா 50 ஓவர்களாக விளையாடுவதை, தலா 25 ஓவர்கள் வீதம் நான்கு இன்னிங்சாக பிரித்து விளையாட வேண்டும்.

* இந்த நான்கு இன்னிங்சில் தலா இரண்டு பேட்டிங் "பவர்பிளே' மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

* முன்னணி பவுலர்கள் நான்கு பேர் தலா 12 ஓவர்கள் பவுலிங் செய்ய அனுமதிக்கலாம்.

* இந்த முறையில் விளையாடினால், பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக போட்டி இருக்காது. ஆடுகளத்தின் ஈரப்பதம், பனிப்பொழிவு இரு அணியினருக்கும் சமமாக இருக்கும்.

* வழக்கமான 50 ஓவர் போட்டிகளின் இடையில் காணப்படும், மந்தநிலையை இதன் மூலம் போக்க முடியும்.

இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.


45 ஓவர் கிரிக்கெட்:

சச்சின் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்கனவே பல தொடர்களில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ளூர் கவுன்டி தொடரில் இதுபோல நான்கு இன்னிங்ஸ் கொண்ட போட்டியாக நடக்கிறது.

ஆஸ்திரேலியாவில் 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி, 25 மற்றும் 20 ஓவர்களாக பிரித்து கடந்த ஆண்டு நடத்தினர். இதில் நிறைய போட்டிகள் பரபரப்பாக முடிந்தன. அதிக ரன்கள் எடுக்கப்பட்டன. அதிக விக்கெட்டுகள் விழுந்தன. இதற்கு ரசிகர்கள் ஆதரவும் அதிகம் இருந்தது.

0 comments:

Post a Comment