டர்பன் டெஸ்ட் போட்டியின் போது ஸ்ரீசாந்த், தன்னை தனிப்பட்ட முறையில் திட்டியதாக தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு கேப்டன் தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியின் சர்ச்சைக்குரிய பவுலர் ஸ்ரீசாந்த். களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷமாக செயல்படுவார். சமீபத்திய டர்பன் டெஸ்ட் போட்டியின் போது இவர் வீசிய பந்து, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித்தின் விரல் பகுதியை தாக்கியது. இதனால், ஆத்திரமடைந்த ஸ்மித், தனது "பேட்டை' நீட்டி ஏதோ கூறினார். பதிலுக்கு ஸ்ரீசாந்தும் ஏதோ சொன்னார்.
இப்பிரச்னை தற்போது பெரிதாகியுள்ளது. தனது குடும்பத்தை பற்றி தனிப்பட்ட முறையில் ஸ்ரீசாந்த் திட்டியதாக நேற்று ஸ்மித் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறியது:
நான் 90 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால், டர்பன் டெஸ்டில் போல நடந்தது இல்லை. ஸ்ரீசாந்த் வரம்பு மீறி எனது குடும்பத்தை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். இதை தோனியிடம் தெரிவித்தேன்.
இது பற்றி "மேட்ச் ரெப்ரி'யிடம் புகார் செல்ல விரும்பவில்லை. இந்த சம்பவத்தால் இரு அணிகளுக்கு இடையிலான உறவில் எந்த பாதிப்பும் வராது. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வீரரால் தான் பிரச்னை. நானும், தோனியும் இதை பேசித் தீர்த்துக்கொள்வோம்.
இன்று போட்டி நடக்கும் கேப்டவுன் எங்களுக்கு சாதகமானது .இதற்கு முன் இங்கு நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளோம். இவ்வாறு ஸ்மித் தெரிவித்தார்.
கட்டுப்படுத்துவது கடினம்:
ஸ்ரீசாந்த் செயல்பாடு குறித்து இந்திய கேப்டன் தோனி அதிருப்தி தெரிவித்தார். அவர் எல்லை மீறக் கூடாது என எச்சரித்தார். இது பற்றி தோனி கூறியது:
ஸ்ரீசாந்த்தை கட்டுப்படுத்துவது சற்று கடினமானது தான். இருப்பினும் அடுத்த போட்டிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார் என்று நம்புகிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. தேசத்துக்காக பங்கேற்கும் போது, தங்களால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும். அதேநேரம், போட்டி விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
வெற்றி வாய்ப்பு:
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக சிறிய விஷயங்களில் கூட அதிக கவனம் எடுத்து, பயிற்சி செய்துள்ளோம். கடந்த 2006ல் இங்கு, முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் வென்றோம். இம்முறை முதன் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி, வரலாறு படைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment