கங்குலி விலை போகாதது ஏன்?

ஐ.பி.எல்., ஏலத்தில், இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை ரொம்ப பரிதாபம். இவரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.

நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று பெங்களூருவில் நடந்தது. தோனி(சென்னை), சச்சின்(மும்பை) போன்ற நட்சத்திர வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்துக் கொண்டன.

ஆனால், 38 வயதான கங்குலியை, ஷாருக் கானின் கோல்கட்டா அணி தக்க வைக்க மறுத்தது. இதையடுத்து பொது ஏலத்தில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் இவர் ரூ. 91 லட்சம் பிரிவில் தான் இருந்தார். பின் இவராகவே தனது அடிப்படை தொகையை ரூ. 1.84 கோடி பிரிவுக்கு மாற்றிக் கொண்டார். இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது. இவருக்கு அதிக தொகை கொடுக்க எந்த ஒரு அணியும் தயாராக இல்லை.

இந்த முறை அனைத்து அணிகளும் இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்தன. ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா போன்ற இளம் வீரர்களை கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கின. ஆனால், மூத்த வீரர்களான கங்குலி, வெஸ்ட் இண்டீசின் லாரா(41 வயது) போன்றவர்களை நிராகரித்தன.

இன்று நடக்கும் இரண்டாவது சுற்று ஏலத்தில் கங்குலியை யாராவது ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உண்டு. ஆனா<லு<ம் முதல் நாளில் இவரை யாரும் வாங்காதது பெரும் பின்னடைவு தான். கும்ளே போல ஆரம்பத்திலேயே ஐ.பி.எல்., ஏலத்தில் இருந்து விலகியிருக்கலாம்.

இது குறித்து ஏலத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கங்குலி தனது அடிப்படை விலையை உயர்த்தியது தவறு. தவிர, கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் தனது திறமையை நிரூபிக்கவில்லை. டிராவிட், லட்சுமண் போன்ற வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கங்குலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக தான் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதே நிலைமை தான் லாராவுக்கும். ஓய்வு பெற்ற இவரும் சர்வதேச போட்டிகளில் சுமார் மூன்று ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. இவர்கள் மீது கோடிகளை கொடுத்து "ரிஸ்க்' எடுக்க அணிகளின் நிர்வாகிகள் தயாராக இல்லை,''என்றார்.


நேற்றைய ஏலத்தில் விலைபோகாத சில முன்னணி வீரர்கள்:

கங்குலி, முரளி கார்த்திக், மெண்டிஸ், ஸ்வான், ஆண்டர்சன், பெர்னாண்டோ, லூக் ரைட், பவுச்சர், லாரா, கிப்ஸ், ரைடர், கிறிஸ் கெய்ல்.

0 comments:

Post a Comment