கொச்சி அணியின் ரோல் மாடல்

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கேரளாவின் கொச்சி அணியில் இணைந்து விளையாட உள்ளார் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் கொச்சி அணியின் "ரோல் மாடலாக' இருப்பார் என்கிறார் அணியின் பயிற்சியாளர் ஜெப் லாசன்.

இந்திய அணியின் "சர்ச்சைக்குரிய' இளம் வீரர் ஸ்ரீசாந்த். கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் விளையாடினார். கடந்த 2008 தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது, ஹர்பஜனிடம் "செல்லமாக' கன்னத்தில் வாங்கிக் கொண்டு, தேம்பி அழுதவர்.

களத்தில் இவரது ஆக்ரோஷசத்தை கட்டுப்படுத்துவது என்பது, கேப்டன் தோனியால் கூட முடியாத காரியம். இதை தோனியே சமீபத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் புதியதாக கொச்சி அணி இணைய, ஸ்ரீசாந்த் எப்படியும் இதில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஏலத்தில், இவரை, ரூ. 4.08 கோடி கொடுத்து கொச்சி அணி ஏலத்தில் எடுத்தது.

இதுகுறித்து கொச்சி அணியின் பயிற்சியாளர் ஜெப் லாசன் கூறுகையில்,"" ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தவிர, தென் ஆப்ரிக்காவிலும் சிறப்பான பார்மில் அசத்துகிறார். விலை மதிப்பில்லாத வீரரான இவர், கொச்சி அணியின் "ரோல் மாடலாக' இருப்பார்,'' என்றார்.

கொச்சி அணியில் விளையாட இருப்பது குறித்து, ஸ்ரீசாந்த் தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,"" சொந்த அணியான கொச்சியில் இணைந்து விளையாட இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக எனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,' என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment