கடந்த 10 ஆண்டுகளில் (2001-2010) இந்தியாவில் விளையாட்டின் வளர்ச்சி பாராட்டும்படியாக அமைந்தது. இனி வரும் காலங்களில் இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் "நம்பர்-1'
இந்த 10 ஆண்டுகளில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு, இந்திய கிரிக்கெட் உச்சத்தை அடைந்தது. கடந்த 2007 ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, முதல் "டுவென்டி-20' உலககோப்பையை தன்வசப்படுத்தியது.
கடந்த 1983 ம் ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கைப்பற்றிய பின், இந்தியா வெல்லும் மிக முக்கிய தொடராக இது அமைந்தது. அதற்குப் பின் டெஸ்ட் அரங்கில் எழுச்சி பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகளை பின்னுக்குத் தள்ளி "நம்பர்-1' (2009) இடத்தை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை (50 ஓவர்) போட்டிகளில், சாதிக்க காத்திருக்கிறது இந்தியா.
முதல் தங்கம்
ஒலிம்பிக்கில் இந்தியா எப்போதுமே பெரிய அளவில் சாதித்தது கிடையாது. ஹாக்கி போட்டியில் மட்டுமே 6 முறை தங்கம் வென்றிருந்தது. 108 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில், தனிநபர் போட்டிகளில் தங்கம் வென்றது இல்லை. இந்திய அணியின் நீண்ட கால கனவு, கடந்த 2008 ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நனவானது.
துப்பாகி சுடுதல் (10 மீ., ஏர் ரைபிள்) போட்டியில், அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதித்தார். மல்யுத்தப் (66 கி.கி., பிரீஸ்டைல்) போட்டியில் சுஷில் குமார், குத்துச்சண்டையில் (75 கி.கி.,) விஜேந்தர் சிங் ஆகியோரும் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினர்.
செய்னா எழுச்சி
பாட்மின்டனில் இந்திய இளம் நட்சத்திரமாக உருவெடுத்தார் செய்னா நேவல். கடந்த 2 ஆண்டுகளில் எழுச்சி பெற்ற இவர், சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். தவிர, சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். எதிர்காலத்தில் பாட்மின்டனில் உலக சாம்பியனாக செய்னா வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் அசத்தல்
புதுடில்லியில் நடந்த 19 வது காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா வெற்றி கொடி நாட்டியது. இந்தியா தரப்பில் சுஷில் குமார் (மல்யுத்தம்), சோம்தேவ் (டென்னிஸ்), ககன் நரங் (துப்பாக்கி சுடுதல்) உள்ளிட்டோர் பதக்க வேட்டை நடத்தினர்.
இந்திய வீரர், வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடுகள் கைகொடுக்க, காமன்வெல்த் அரங்கில் முதல் முறையாக 2 வது இடத்தை (38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்லகம் உட்பட 101 பதக்கம்) கைப்பற்றி சாதனை படைத்தது. சமீபத்தில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டிலும் (14 தங்கம், 17 வெள்ளி, 33 வெண்கலம் உட்பட 64 பதக்கம்) 6 வது இடம் பிடித்தது.
டென்னிசில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் தேவ்வர்மன், சானியா மிர்சா, டேபிள் டென்னிசில் சரத் கமல், சகா, பாட்மின்டனில் ஜுவாலா கட்டா, தடகளத்தில் மன்ஜித் கவுர், கிருஷ்ண பூனியா, ஜிம்னாஸ்டிக்கில் ஆசிஷ் குமார், துப்பாக்கி சுடுதலில் ரஞ்சன் சோதி, குர்பிரீத் சிங், ஹார்பிரீத் சிங், விஜய் குமார், ஓம்கார் சிங், அனிசா சயீத், வில்வித்தையில் தீபிகா குமாரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
வரும் 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா குறைந்தது 10 தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய விளையாட்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
0 comments:
Post a Comment