கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது.
தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 362 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் 65, சச்சின் 49 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
நழுவிய சதம்:நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், காம்பிர் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் செய்த, எந்த முயற்சியும் பலிக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்கள் சேர்த்து சாதித்தது. இந்நிலையில் காம்பிர், 93 ரன்களுக்கு (13 பவுண்டரி) அவுட்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.
"மிடில் ஆர்டர்' சரிவு:பின் சச்சினுடன் லட்சுமண் இணைந்தார். வழக்கத்துக்கு மாறாக லட்சுமண், சற்று அதிரடியாக விளையாடினார். இவர் 15 ரன்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் ஏமாற்றிய இளம் வீரர் புஜாரா (2), மீண்டும் சொதப்பினார். கேப்டன் தோனி "டக்' அவுட்டானார்.
சச்சின் சதம்:ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட் சரிந்த போதும், மறுமுனையில் சச்சின் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிசோட்சபே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசிய சச்சின், மார்கல் பந்தில் "மிரட்டல்' சிக்சர் அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 51 வது சதத்தை எட்டினார்.
ஹர்பஜன் ஆறுதல்:சச்சினுடன் இணைந்த ஹர்பஜன், துவக்கத்தில் தடுமாறிய போதும், பின் அதிரடியில் அசத்தினார். டிசோட்சபே பந்தில் சூப்பர் சிக்சர் அடித்த இவர், ஸ்டைனின் பந்திலும் சிக்சர் விளாசினார். ஹர்பஜன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 146 ரன்கள் (17 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து, மார்கல் பந்தில் போல்டானார். இஷாந்த் (1) நிலைக்கவில்லை.
கடைசியில் ஜாகிர் கான் (23) அடித்த 2 சிக்சர் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீசாந்த் (4) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன், 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா முன்னிலை:இரண்டு ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், பீட்டர்சன் துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 29 ரன்கள் எடுத்தார். "நைட் வாட்ச்மேன்' ஹாரிஸ் "டக்' அவுட்டானார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. பீட்டர்சன் (22), அவுட்டாகாமல் இருந்தார். ஹர்பஜன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் பவுலிங்கில் ஹர்பஜன் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
சச்சின் மீண்டும் அசத்தல்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் சமீபத்தில் 50 வது சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், நேற்று 51வது சதம் கடந்து (177 போட்டி), மற்றொரு சாதனை படைத்தார். தவிர, 442 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 46 சதம் அடித்துள்ள சச்சின், ஒட்டுமொத்தமாக 97 சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த, "டாப்-3' வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்
1.சச்சின் (இந்தியா) 177 14,678 51
2.காலிஸ்(தெ.ஆப்.,) 145 11,838 39
3.பாண்டிங்(ஆஸி.,) 152 12,363 39
"பெஸ்ட்' ஜோடி
நேற்று இந்தியாவின் சச்சின், காம்பிர் ஜோடி 176 ரன்கள் சேர்த்து, தென் ஆப்ரிக்க மண்ணில் 1990க்கு பின் 3வது விக்கெட்டுக்கு, அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது. இதற்கு முன் ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி 168 ரன்கள் (2000) சேர்த்து இருந்தது. தவிர, இந்தியா சார்பிலும் 3வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையும் பெற்றது. இதற்கு முன் டிராவிட், கங்குலி ஜோடி 84 ரன்கள் (2007) சேர்த்து இருந்தது.
"லக்கி' ஹர்பஜன்
நேற்று ஹர்பஜன் 6 ரன்கள் எடுத்திருந்த போது, தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைனின் புயல் வேக பந்தை எதிர்கொண்டார். இதை அடிக்காமல் விட்டுவிட, பந்து "ஆப் ஸ்டம்பை' உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஹர்பஜன் "அவுட்' என எல்லோரும் துள்ளிக்குதித்தனர். ஆனால் "பைல்ஸ்' கீழே விழாததால், அதிருஷ்டவசமாக ஹர்பஜன் தப்பினார்.
காலிஸ் காயம்
கேப்டவுன் டெஸ்டின் 2வது நாளில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ், ஸ்ரீசாந்த் பந்தை எதிர்கொண்ட போது, வலது நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று இவர் பீல்டிங் செய்யவரவில்லை. இவர் 2வது இன்னிங்சில் களமிறங்குவது கடினம். தவிர, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
ஸ்ரீசாந்த் மீது பாட்டில் "வீச்சு'
நேற்று தென் ஆப்ரிக்க அணியின் 2வது இன்னிங்சில், மைதானத்தின் எல்லைப் பகுதியில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த், பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் இவர் மீது காலியான பாட்டில்களை கொண்டு எறிந்தனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
0 comments:
Post a Comment