தோனிக்கு நெருக்கடி: கங்குலி கருத்து

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், மாற்று விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்படாததால், போட்டியின் போது தோனிக்கு நெருக்கடி ஏற்படலாம்,'' என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை (பிப்.19-ஏப்.2) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் வாய்ப்பு பெறவில்லை. தவிர, இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து, கடந்த 2003ல் இந்திய அணியை உலக கோப்பை பைனலுக்கு அழைத்துச் சென்ற, முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், திறமைøயான இளம் மற்றும் அனுபவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இம்முறை இந்திய அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. தவிர, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு போட்டியில் சாதிக்க கைகொடுக்கும். ஒருவேளை கோப்பை வெல்ல தவறினாலும், ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைக்கும்.

அணியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவரை அணியில் சேர்க்காதது ஏன் எனத் தெரியவில்லை. இத்தொடரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு விக்கெட் கீப்பருடன் களமிறங்குகின்றன.

ஆனால் இந்திய அணியில் கேப்டன் தோனி மட்டும் விக்கெட் கீப்பராக உள்ளார். இவருக்கு மாற்று வீரராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இது, போட்டியில் தோனிக்கு நெருக்கடி அளிக்கலாம். ஏனெனில் போட்டியின்போது லேசான காயம் அல்லது ஓய்வு தேவைப்படும் பட்சத்தில், மாற்று கீப்பராக நிறுத்த அனுபவ வீரர் இல்லை.

இதனால் இவர், தனது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஜாகிர், ஹர்பஜன், நெஹ்ரா உள்ளிட்ட திறமையான பவுலர்கள் இடம் பெற்றிருப்பது பலம்.

ஒவ்வொரு அணிகளும், உலக கோப்பை தொடருக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் பிரட் லீ, டெய்ட் உள்ளிட்ட திறமையான பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்க அணியில் "ஆல்-ரவுண்டர்' காலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. எனவே, எந்த அணி கோப்பை வெல்லும் என்பதை தற்போது உறுதியாக கூற முடியாது.

சமீபத்தில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் கொச்சி அணி சார்பில் விளையாட, அந்த அணி நிர்வாகம் என்னை அணுகியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுவரை எந்த ஒரு ஐ.பி.எல்., அணியும் என்னை அணுகவில்லை.

ஏற்கனவே கூறியது போல, பாரத ரத்னா விருது பெற இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தகுதியானவர். இவ்விருது இவருக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment