விலை மதிப்பற்ற இந்திய வீரர்கள்

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் உலகப்புகழ் பெற்றது. இதில் இணைந்து விளையாடுவதற்காக, பிற நாட்டு வீரர்கள் தேசிய அணிகளைக் கூட புறக்கணிக்கத் தயாராக இருந்தனர்.

ஆனால் சமீபத்தில் முடிந்த நான்காவது தொடருக்கான ஏலத்தில், இந்திய இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கத்தான் அதிக போட்டி நிலவியது. கோடிகளை கொட்டிக் கொடுத்து இவர்களை வாங்கினர்.

இரண்டு நாட்கள் நடந்த ஏலத்தில் 350க்கும் அதிகமாக வீரர்கள் இடம் பெற்று, 200க்கு மேற்பட்டோர் விலை போகாமலே திரும்பினர். இதில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 45, ஆஸ்திரேலியா 36, தென் ஆப்ரிக்கா 18, இலங்கை 9, இங்கிலாந்து 7, நியூசிலாந்து 7, வெஸ்ட் இண்டீஸ் 3 மற்றும் வங்கதேசம், நெதர்லாந்தில் இருந்து தலா ஒரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் முதல் நாள் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட "டாப்-10' வீரர்களில் காம்பிர் (ரூ. 11.04 கோடி), யூசுப் பதன் (ரூ. 9.66 கோடி), உத்தப்பா (ரூ. 9.66 கோடி), ரோகித் சர்மா (ரூ. 9.07 கோடி), இர்பான் பதான் (ரூ. 8.74 கோடி), யுவராஜ் சிங் (ரூ. 8.28 கோடி), சவுரப் திவாரி (ரூ. 7.25 கோடி) என, முதல் ஏழு பேர் இளம் இந்திய வீரர்கள் தான்.

இரண்டாவது நாளிலும் உமேஷ் யாதவ் (ரூ. 3.40 கோடி), முனாப் படேல் (ரூ 3.17 கோடி), வேணு கோபால் ராவ் (ரூ. 3.17 கோடி), பாலாஜி (ரூ. 2.27 கோடி), வினய் குமார் (ரூ. 2. 15 கோடி), அசோக் டின்டா (ரூ. 1.70 கோடி), கோனி (ரூ. 1.32 கோடி) என, ஏழு வீரர்கள் இளம் இந்திய வீரர்கள் தான் "டாப்-10' ல் இருந்தனர்.


காரணம் என்ன?

கடந்த 2008, 2009ல் நடந்த ஏலத்தில் எல்லாம் பிளின்டாப், பீட்டர்சன், டெய்ட், பாண்டிங், ஷேன் பாண்ட், ஓரம் என வெளிநாட்டு வீரர்களை குறிவைத்து, அதிக தொகையை கொட்டிக் கொடுத்தனர். ஆனால் இவர்கள் தொடர் நடக்கும் நேரங்களில் தங்கள் சொந்த அணிக்காக பங்கேற்க செல்கின்றனர். கிடைக்கும் நேரத்தில் வந்து ஏதாவது 4 போட்டியில் மட்டும் பங்கேற்று, முழு ஒப்பந்த தொகையையும் பெற்று விடுகின்றனர்.


விழிப்பான உரிமையாளர்கள்:

பல கோடிகளை கொடுத்தும், அணி கடைசியில் தோற்க நேரிடுகிறது. இந்திய வீரர்களாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாட தயாராக இருப்பார்கள். இந்த அனுபவம் தந்த பாடம், அணி உரிமையாளர்களை, ஏலத்தின் போது அதிகமாகவே யோசிக்க வைத்துள்ளது. இதனால் துவக்கத்தில் இருந்த இந்திய இளம் மட்டும் வீரர்களை குறிவைத்து எடுத்தனர்.


இளமைக்கு லாபம்:

இந்திய அணிக்காக ஒருசில போட்டிகளில் மட்டும் பங்கேற்ற அசோக் டின்டா, கோனி, உனத்கட், வினய் குமார் மற்றும் மனோஜ் திவாரி அதிக அறிமுகம் ஆகாத வேணுகோபால் ராவ் கூட கோடிகளில் விலை போனார்கள். அதேநேரம், எத்தனை கங்குலி, கெய்ல், லாரா, ஜெயசூர்யா போன்ற பெரிய சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.


குறைந்த தொகை:

வெளிநாட்டு வீரர்களில் இலங்கையின் ஜெயவர்தனா மட்டும், அதிகபட்சமாக ரூ. 6.90 கோடிக்கு ஏலம் போனார். கடந்த முறை 3 கோடிக்கும் அதிகமாக பெற்ற ஷான் டெய்ட்டுக்கு, இம்முறை ரூ. 1.36 கோடி தான் கிடைத்தது. 7.5 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்தின் பீட்டர்சனுக்கு, அதே பெங்களூரு அணி இம்முறை 2.95 கோடி ரூபாய் தான் கொடுத்தது.

மொத்தத்தில் இந்திய வீரர்களுக்காக நடத்தப்படும் இந்த தொடர், இளம் வீரர்களுக்கு இம்முறை அதிக லாபகரமாகவே இருந்தது.

0 comments:

Post a Comment