கங்குலிக்கு வாய்ப்பு: கொச்சி அணி மறுப்பு

ஐ.பி.எல்., ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, கொச்சி அணியில் வாய்ப்பு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. இதனை கொச்சி அணியின் நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் 2008, 2010 தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி.

நான்காவது தொடருக்கான ஏலத்தில் கோல்கட்டா உட்பட, 10 அணிகளின் உரிமையாளர்களில், ஒருவர் கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் கோல்கட்டாவில் ஷாருக் கானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதன் பின் இவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

இந்நிலையில், கொச்சி அணி கங்குலியை சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளது. இந்த அணியில் லட்சுமண் தவிர, வேறு பிரபலமான வீரர்கள் யாரும் இல்லாததால் கங்குலியை சேர்ப்பதற்கு, ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக் குழுவை கொச்சி நிர்வாகம் அணுகியுள்ளது.

ஐ.பி.எல்., விதிப்படி சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை, பொது ஏலத்தில் மட்டுமே எடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்ய முடியாது. இதனால் கங்குலி விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற 9 அணி உரிமையாளர்கள், சம்மதிக்கும் பட்சத்தில், கங்குலி கொச்சி அணியில் இணைவார் எனத் தெரிகிறது.

இதற்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், மற்ற அணிகளை சரிக்கட்டும் முயற்சியில் கொச்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், முன்பு கோல்கட்டா அணியில் இருந்த பிரண்டன் மெக்கலம், ஹாட்ஜ், ஓவைஷா ஆகியோருடன், கங்குலி மீண்டும் "கேப்டனாக' களமிறங்கலாம்.

இதேபோல ஏலத்தில் விலை போகாத வாசிம் ஜாபர், வி.ஆர்.வி.சிங் ஆகியோரும் எதாவது ஒரு அணியில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


கொச்சி மறுப்பு:

இதனிடையே கங்குலி தொடர்பான செய்திக்கு கொச்சி அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணியின் சக உரிமையாளர் கெய்க்வாட் கூறுகையில்,"" அணியில் கங்குலியை சேர்ப்பது குறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கே இடமில்லை,'' என்றார்.

1 comments:

  1. கங்குலி கொச்சினுக்கு விளயாடினாகூட மகேலாதான் காப்டன்.

    ReplyDelete