மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதை இந்த முறை இந்திய அணி முறியடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஸ்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த அவர் மேலும் கூறியது: இப்போதுள்ள இந்திய அணி அனுபவ வீரர்கள், இள வீரர்கள் என சமபலம் நிறைந்த சிறந்த அணியாக உள்ளது.
அதனால் இதுவரை உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் கோப்பையை வென்றதில்லை என்பதை முறியடித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருப்பதாக கருதுகிறேன். இந்தியா உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று நம்புகிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே வீரர்களைப் பற்றி விமர்சிக்காமல், இந்தியர்கள் அனைவரும் இந்திய அணிக்கு தங்களின் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும். இப்போது இந்திய அணியின் ஒரே பலவீனம் பீல்டிங்தான்.
பௌலர்களிடமும் சில குறைகள் உள்ளன. அதை கண்டுபிடித்து சரி செய்ய கேப்டன் முயற்சிக்க வேண்டும். மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இங்குள்ள மைதானங்கள், சீதோஷ்ண நிலை ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் அவர்களுக்கு இருக்கும்.
இந்தியாவில் போட்டி நடைபெறுவதில் உள்ள பலமும், பலவீனமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அது வீரர்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடும். இந்த முறை ஆஸ்திரேலியா தவிர மற்ற அணிகளும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல கூடுதல் வாய்ப்புள்ளது என்றார்.
0 comments:
Post a Comment