இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக உள்ளது. இம்முறை வீரர்கள் தங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம், ''என, கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று சாதித்தது. தற்போது இந்திய துணை கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர்(பிப். 19-ஏப். 2) நடக்க உள்ளது. இது குறித்து "கிரிக்கெட் ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி, உலக கிரிக்கெட்டில் இதற்கு முன் எப்போதும் பார்க்காத வகையில், வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பவுலிங்கில் மட்டும் சற்று பலவீனமாக இருந்தாலும், பார்ப்பதற்கு சமபலமாக தோன்றுகிறது. இந்திய வீரர்கள் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தினால், புதிய உலக சாம்பியனாக உருவெடுக்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை உள்ளூரில் விளையாடுவது தான் மிகப்பெரிய பலம். அதுவே பெரிய பலவீனமும் கூட. அணியின் கேப்டன் தோனி, என்னைவிட சிறப்பானவர். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் ஜொலிக்கிறார். இந்தியர்கள் அனைவரும் விரும்பும் உலக கோப்பையை, தோனி இம்முறை கைப்பற்றி சாதிப்பார் என்று நம்புகிறேன்.
யாரும் இல்லை:
கடந்த 1983ல் "கறுப்பு குதிரைகளாக' செயல்பட்ட நாங்கள், யாரும் எதிர்பாராத வகையில் கோப்பை வென்றோம். ஆனால் இம்முறை எந்த அணியும் "கறுப்பு குதிரையாக' செயல்படும் என நினைக்கவில்லை. ஏனெனில் 3 அல்லது 4 அணிகள் ஒன்றைவிட ஒன்று விஞ்சும் வகையில் உள்ளன.
இங்கிலாந்து சிறப்பான அணியாக மீண்டு வந்துள்ளது. தவிர, இலங்கை அணி மீது எப்போதுமே நம்பிக்கை உண்டு. இதே போன்று தான் ஆஸ்திரேலியாவும் உள்ளது.
கணிக்க முடியாது:
வலிமையான பவுலர்களை கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியும், யாரையும் வீழ்த்த வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகம் நம்பமுடியாத அணியாக உள்ளது. இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்கவே முடியாது. குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்பட்டு, திடீரென எந்த அணியையும் சாய்த்து விடுவார்கள்.
மகிழ்ச்சியான தேர்வு:
உலக கோப்பை தொடரின் விளம்பர தூதராக சினிமா நட்சத்திரம், பாடகர் அல்லது அரசியல்வாதி என யாரையும் தேர்வு செய்யாமல், சச்சினை தேர்வு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஐ.சி.சி.,க்கு நன்றி சொல்ல வேண்டும். சக வீரர் ஒருவர், இப்படி தூதராக இருப்பது பெருமிதம் கொள்ளச்செய்கிறது.
கிரிக்கெட்டை, கிரிக்கெட் விளையாடும் நபரால் மட்டுமே சிறப்பாக விளம்பரம் செய்ய முடியும். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, சிறப்பான விளையாட்டு வீரராக திகழும் சச்சினைத் தவிர, இதற்கு வேறு பொறுத்தமான நபர் யாருமில்லை.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment