இந்திய அணி கேப்டன் தோனிக்கு ஓய்வு தேவையா?



தோனிக்கு சற்று ஓய்வு தரப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2007ல் தோனி தலைமையில் இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. அடுத்து ஒருநாள், 2008ல் டெஸ்ட் அணி என, மூன்றுவித அணிக்கும் கேப்டன் ஆனார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளில், இவர் தான் கேப்டன். முக்கியத்துவம் இல்லாத தொடர்களில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஓய்வு கொடுத்து விடுகிறது.


முதல் தோல்வி:

கடந்த 2010ல் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க, தோனி இல்லாமல் முதன் முறையாக ஜிம்பாப்வே சென்றது இந்திய அணி. இதில் ரெய்னா தலைமையிலான அணி, இரு போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோற்க, பைனலுக்கு முன்னேற முடியவில்லை. 

பின், 2011 உலக கோப்பை தொடர் முடிந்த பின் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணிக்கு, ரெய்னா மீண்டும் கேப்டன் ஆனார். இதில் 3-2 என, இந்தியா கோப்பை வென்றது. 

அடுத்து சொந்தமண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது, சேவக் இடம் பெறவில்லை. இம்முறை காம்பிரிடம் கேப்டன் பொறுப்பு சென்றது. இதில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5-0 என, தொடரை முழுமையாக வென்றது. 


மீண்டும் வெற்றி:

இதையடுத்து, 2011 நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா வந்தது. இம்முறையும் கேப்டன் தோனிக்கு ஓய்வு தரப்பட்டது. இதனால், சேவக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், இந்திய அணி 4-1 என, வென்றது. 


ஐந்தாவது முறை:

கடந்த 2008ல் மூன்று வித அணிக்கும் தோனி கேப்டனான பின், இப்போது, ஐந்தாவது முறையாக இவர் இல்லாமல், இந்திய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இம்முறை ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு, கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். 

இதில் அஷ்வின், இஷாந்த் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. இருப்பினும், 2010 போல அல்லாமல் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.


தோனி ஓய்வு சரியா:

இதனிடையே, முக்கியத்துவம் இல்லாத தொடர்களில் தோனி ஓய்வு எடுப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா, சென்னை அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் என்ற கூடுதல் பொறுப்பு உள்ள நிலையில், அடுத்து வரும் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக இந்த ஓய்வு தேவை தான் என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.

ஏனெனில், இந்திய அணி வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழு ஒருநாள், ஒரு "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அடுத்து தென் ஆப்ரிக்காவில் இரண்டு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், பின்பு நியூசிலாந்து பயணம், அடுத்து "டுவென்டி-20' உலக கோப்பை, ஏழாவது பிரிமியர் தொடர் முடிந்து மீண்டும் இங்கிலாந்து பயணம் என்று பட்டியல் நீளுகிறது. 

இப்போது சொல்லுங்கள் தோனிக்கு இந்த ஓய்வு தேவையா, இல்லையா என்று.

0 comments:

Post a Comment