தவான் அசத்தல் சதம் : இந்திய அணி வெற்றிஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தவான் சதம், உனத்கத் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இருஅணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. 

இதில் "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், முதலில் "பீல்டிங்' தேர்வு செய்தார்.  ஜிம்பாப்வே அணியில் முடாம்போட்சிக்கு பதில் பிரையன் விட்டோரி இடம் பிடித்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இந்திய அணிக்கு  துவக்க வீரர் ரேகித் சர்மா (1) ஏமாற்றினார். பின் வந்த கேப்டன் கேஹ்லி (14) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். ராயுடு (5), ரெய்னா (4) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.  

பின் இணைந்த தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.  இரண்டு முறை தப்பிய ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இவருக்கு கம்பெனி கொடுத்த கார்த்திக்  அரைசதம் கடந்தார். 

ஐந்தாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த போது, தினேஷ் கார்த்திக் (69) ரன்-அவுட் ஆனார். அபாரமாக ஆடிய ஷிகர் தவான் (116) நம்பிக்கை தந்தார். அடுத்து வந்த அமித் மிஸ்ரா (9), ரவிந்திர ஜடேஜா (15) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய வினய் குமார் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. வினய் குமார் (27), முகமது ஷமி (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் பிரையன் விடோரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

  கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஜிம்பாப்வே அணிக்கு சிபாண்டா, சிக்கந்தர் ராஜா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. உனத்கத் பந்தில் சிக்கந்தர் ராஜா (20) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சிபாண்டா அரைசதம் அடித்தார். இவர், 55 ரன்களில் அவுட்டானார். 

அடுத்து வந்த கேப்டன் பிரண்டன் டெய்லர் (0) "ரன்-அவுட்' ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹாமில்டன் மசகட்சா (34) பெரிய அளவில் சோபிக்கவில்லை. "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய வில்லியம்ஸ் (5), வாலர் (2) சொற்ப ரன்னில் வெளியேறினர். 

சிகும்பரா (46) ஆறுதல் அளித்தார். ஜார்விஸ் (2), விடோரி (0) உனத்கத்திடம் சிக்கினர். முடிவில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் உனத்கத் 4, அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினர். 

0 comments:

Post a Comment