தோனி உள்ளிட்ட 5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு



ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் தோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவேனஸ்வர் குமார், உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் வீரர் பர்வேஸ் ரசூல் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் என்ற பெருமையை ரசூல் பெற்றுள்ளார்.

விராட் கோலி தலைமையில் விளையாடவுள்ள இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெயதேவ் உனட்கட், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா சிறப்பாக பந்துவீசியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதேநேரத்தில் தொடர்ந்து சரியாக விளையாடாத தமிழக வீரரான முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக்குழு கூட்டத்தின்போது மூத்த வீரர்களான கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர்கான், பிரவீண் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை.

தேர்வுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அணியின் விவரத்தை வெளியிட்ட பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல், "ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர்கள் அடங்கிய அணியுடன் செல்ல விரும்பினோம்' என்றார்.

ஜூலை 24-ம் தேதி தொடங்கும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதியோடு நிறைவடைகிறது.

இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க "ஏ' அணிகளுடன் முத்தரப்புத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய "ஏ' அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சேதேஷ்வர் புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்புத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

யார் இந்த பர்வேஸ் ரசூல்? ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரான பர்வேஸ் ரசூல், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இந்திய "ஏ' அணியில் இடம்பிடித்தார். 

அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் 36 ரன்கள் சேர்த்தார். இது அந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த 2-வது அதிகபட்ச ரன்னாகும். 

இதன்பிறகு கடந்த ஐபிஎல் போட்டியில் புணே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ரசூல், இப்போது இந்திய அணியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஆல்ரவுண்டரான ரசூல், இதுவரை 17 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளையும், 1,003 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், சேதேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது சமி, வினய் குமார், ஜெயதேவ் உனட்கட், மோஹித் சர்மா.

இந்திய ஏ அணி: சேதேஷ்வர் புஜாரா (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக், அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சாஹா, பர்வேஸ் ரசூல், சபேஸ் நதீம், முகமது சமி, ஸ்டூவர்ட் பின்னி, ஈஸ்வர் பாண்டே, ஜெயதேவ் உனட்கட், சித்தார்த் கெளல்.

0 comments:

Post a Comment