தோனி வழியில் விஜய்

இந்திய கேப்டன் தோனி போல, அணியை திறம்பட வழிநடத்த வேண்டும்,'' என, விஜய் ஜோல் விருப்பம் தெரிவித்தார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற, 19 வயதுக்குட்பட்டோருக்கான "இளம்' இந்திய அணி, பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இத்தொடரில் பேட்டிங்கில் அசத்திய இந்திய கேப்டன் விஜய் ஜோல், தொடர் நாயகன் விருது வென்றார்.

இதுகுறித்து விஜய் ஜோல் கூறியது: சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைத்தது. 

குறிப்பாக பைனலில், கேப்டன் தோனியின் செயல்பாடு அருமையாக இருந்தது. என்னைப் போன்ற இளம் வீரர்கள், இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய போட்டிகளில், இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார். 

போட்டியின் சூழ்நிலைக்கேற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எப்போதும் "கூலாக' இருக்கும் இவரது இயற்கை குணத்திற்கு நானும் ஒரு ரசிகன். இவரை போல அணியை திறம்பட வழிநடத்த விரும்புகிறேன். ஆனால் இது கடினம். எனவே, இவரது திறமையில் பாதி இருந்தால் கூட போதுமானது. நெருக்கடியான நேரத்தில் எப்படி சாமர்த்தியமாக முடிவு எடுக்க வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

  ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே அணியாக இணைந்து போராடியதால், 100 சதவீத வெற்றியுடன் தொடரை கைப்பற்ற முடிந்தது. இது, ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி. இத்தொடருக்கு முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டேன். 

இத்தொடரில் பங்கேற்ற நிறைய வீரர்கள் முதன்முறையாக விளையாடினர். ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதை என்றும் மறக்க முடியாது.

ஒவ்வொரு போட்டிக்கு முன், ஒருவித நெருக்கடி இருந்தது. ஆனால் 100 சதவீத வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு விளையாடியதால், போட்டியில் கவனம் செலுத்த முடிந்தது. 

கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தொடரில், கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆரம்பம் தான். வரும் காலங்களில் சீனியர் இந்திய அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். தற்போது இதுகுறித்து அதிகம் சிந்திக்கவில்லை.

எனது கவனம் முழுவதும், அடுத்து வரவுள்ள இலங்கைக்கு எதிரான தொடரில் மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கண்ட வெற்றிநடையை இலங்கையிலும் தொடர விரும்புகிறேன்.

எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வித விளையாட்டிலும் இல்லை. எனது தந்தை கொடுத்த ஆதரவினால் தான் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறேன். 

"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கை தான், என்னை கிரிக்கெட் விளையாட தூண்டியது. சேவக்கின் அதிரடியான பேட்டிங், யுவராஜ் சிங்கின் போராடும் குணம் பிடிக்கும். 

சர்வதேச அளவில், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்.

இவ்வாறு விஜய் ஜோல் கூறினார்.

0 comments:

Post a Comment