தென் ஆப்ரிக்கா தொடர் - பி.சி.சி.ஐ., எதிர்ப்புஇந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை, தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்ட தென் ஆப்ரிக்காவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. 

வரும் நவம்பர் முதல் 2014 ஜனவரி வரை (60 நாட்கள்) தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, இரண்டு "டுவென்டி-20', ஏழு ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதுகுறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) நிர்வாகிகள், இத்தொடர் குறித்து விவாதித்தனர். இதனிடையே, போட்டிகள் நடக்கும் தேதி மற்றும் இடங்கள் குறித்த அறிவிப்பை, சி.எஸ்.ஏ., வெளியிட்டது.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெரிவித்தபடி தான் அட்டவணை வெளியாகியுள்ளது என்றாலும், என்ன காரணத்துக்காக எதிர்க்கின்றனர் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" சி.எஸ்.ஏ., வெளியிட்ட அட்டவணை குறித்து எதுவும் தெரியாது. எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்டுள்ளனர். இது சரியல்ல. இதுகுறித்து சி.எஸ்.ஏ.,யிடம் பேசும் முன், தற்காலிக தலைவர் டால்மியாவிடம் பேசவுள்ளேன்,'' என்றார். 

பி.சி.சி.ஐ., எதிர்ப்பு குறித்து சி.எஸ்.ஏ., செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.


காரணம் என்ன:

இப்போதுள்ள அட்டவணைப் படி, தென் ஆப்ரிக்க தொடர் முடிந்து (2014, ஜன., 19) அடுத்த ஆறு நாட்களில் (2014, ஜன., 25), நியூசிலாந்து மண்ணில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது மிகவும் சிரமம் என்பதால், பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

0 comments:

Post a Comment