கோப்பை வெல்வாரா கோஹ்லி? ஜிம்பாப்வே புறப்பட்டது இந்தியா



ஒருநாள் தொடரில் பங்கேற்கும் விராத் கோஹ்லி தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே புறப்பட்டது. 

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்பு தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. அடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதற்காக, கோஹ்லி தலைமையிலான அணியினர் நேற்று, மும்பையில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றனர். தோனி, அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட "சீனியர்' வீரர்களுக்கு இம்முறை ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் "கத்துக்குட்டியான' ஜிம்பாப்வே அணி, அவ்வப்போது எதிரணிகளுக்கு "ஷாக்' கொடுக்கும். உதாரணமாக 1983ல் நடந்த உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணியை தனது மிரட்டல் பந்துவீச்சால் திணறடித்தது. ஒருகட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தவித்தது. பின் கபில்தேவ் 175 ரன்கள் விளாசி, அணியை மீட்டார். 

தொடர்ந்து 1999ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி, இந்தியாவை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2002ல் பரிதாபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 275 ரன்களை விரட்டிய ஜிம்பாப்வே அணி, 8 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின் டக்கி மரிலியர், தைபு சேர்ந்து அதிசயம் நிகழ்த்தினர். 24 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய மரிலியர், ஜிம்பாப்வே அணிக்கு இந்திய மண்ணில் முதல் வெற்றி தேடித்தந்தார்.

சமீப காலமாக பார்த்தால், ஜிம்பாப்வே அணி சொதப்புகிறது. டெஸ்ட் அந்தஸ்தை கூட சில ஆண்டுகளுக்கு(2005-11) இழந்தது. ஆனாலும், தற்போதைய இந்திய அணி அனுபவம் இல்லாதது. இதனை பயன்படுத்திக் கொண்டு எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, கோஹ்லி துடிப்பாக வியூகம் அமைத்து இந்திய அணிக்கு கோப்பை பெற்றுத்தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புஜாரா, ரெய்னா, அம்பதி ராயுடு, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி, வினய் குமார், உனத்கத், மோகித் சர்மா. 

0 comments:

Post a Comment