இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம்இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது,'' என, முன்னாள் வீரர் சந்து போர்டே தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்து போர்டே, 79. இதுவரை 55 டெஸ்ட் (3061 ரன், 52 விக்.,) போட்டியில் விளையாடினார். இந்திய கிரிக்கெட் குறித்து சந்து போர்டே கூறியது: 

இந்தியாவில் திறமையான இளம் வீரர்கள் நிறைய இருப்பதால், வரும் காலத்தில், இரண்டு தேசிய அணிகளை தேர்வு செய்யலாம். தற்போதுள்ள நிலையில், இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. இது ஆரோக்கியமான ஒன்று. இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

தற்போதுள்ள வீரர்கள், தங்களது திறமையை வெளிப்படுத்தி நிறைய வாய்ப்புகள் உள்ளன. ரஞ்சி கோப்பை தொடரை லீக் சுற்று அடிப்படையில் நடத்துவதன் மூலம், அதிக போட்டிகளில் விளையாட முடிகிறது. எங்களது காலத்தில், ரஞ்சி போட்டிகள் "நாக்-அவுட்' சுற்று அடிப்படையில் நடத்துவதால், வீரர்கள் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும்.

தவிர, தற்போது இந்தியாவில் கிரிக்கெட் பயிற்சிக்காக நிறைய அகாடமிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னாள் வீரர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி அகாடமிகள் மூலம், நிறைய திறமையான இளம் வீரர்கள் உருவாகின்றனர். எங்களது காலத்தில், பயிற்சிக்காக யாரும் நியமிக்கப்படவில்லை.

இவ்வாறு சந்து போர்டே கூறினார்.

இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, மற்றொரு இந்திய வீரர் சேட்டன் சவுகான், 66, கூறியது: இந்தியாவில் நடத்தப்படும் பிரிமியர் கிரிக்கெட் தொடர் மூலம், வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த முடிகிறது. 

தவிர, பீல்டிங்கின் போது "டைவ்' அடித்து பந்தை பிடிக்க வீரர்கள் யாரும் தயங்குவதில்லை. எங்களது காலத்தில் இந்திய அணியில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை மற்றும் கோல்கட்டாவை சேர்ந்த வீரர்கள் மட்டுமே இடம் பிடிப்பார்கள். ஆனால் தற்போது சிறிய நகரங்களில் இருந்து நிறைய வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டு அமைப்புகளும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கொண்டு வர வேண்டும். இதன்மூலம் அனைத்து விளையாட்டு அமைப்புகளுக்கும் பொது நிதி கிடைக்கும். இது, எனது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு சேட்டன் சவுகான் கூறினார்.

0 comments:

Post a Comment