ரேங்கிங்: இந்தியா நம்பர்-1



ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில், "உலக சாம்பியன்' இந்திய அணி "நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 

சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இதன்மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112 புள்ளி), தென் ஆப்ரிக்கா (110 புள்ளி), இலங்கை (108 புள்ளி) அணிகள் "டாப்-5' வரிசையில் உள்ளன.

தோனி பின்னடைவு: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். காயம் காரணமாக முத்தரப்பு தொடரில் மூன்று போட்டியில் விளையாடாத இந்திய கேப்டன் தோனி, 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இலங்கை வீரர் சங்ககரா 5வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இலங்கை வீரர் மகிளா ஜெயவர்தனா 21வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஆம்லா நீடிக்கின்றனர்.

புவனேஷ்வர் முன்னேற்றம்: முத்தரப்பு தொடரில், தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் புவனேஷ்வர் குமார், பவுலர்களுக்கான ரேங்கிங்கில் 29 இடங்கள் முன்னேறி, 20வது இடம் பிடித்தார். "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

"சுழலில்' அசத்திய இலங்கையின் ஹெராத், 14 இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்தார். இலங்கை கேப்டன் மாத்யூஸ், 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை கைப்பற்றினார்.

முதல் மூன்று இடங்களில் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் ஆகியோர் நீடிக்கின்றனர்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 5வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் உள்ளனர்.

0 comments:

Post a Comment