ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஜஸ்டின் லாங்கர். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளைக் குவிக்க இவரது சிறப்பான ஆட்டம் முக்கியப்பங்கு வகித்தது.
ஜஸ்டின் லீ லாங்கர் 1970-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் பிறந்தார். இடதுகை ஆட்டக்காரரான இவர், 1993-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக களம் கண்டார்.
ஆரம்பத்தில் மூன்றாவது வீரராக களமிறங்கிய லாங்கர், 2001-ல் மைக்கேல் ஸ்லேட்டரின் ஓய்வுக்குப் பிறகு ஹைடனுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 14 சதங்கள் விளாசியுள்ளார்.
2002-2003-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் 250 ரன்கள் குவித்து தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார்.
2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 305 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதை வென்றார். அதன் பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் தனது இடத்தை இழந்தார்.
பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பி சில காலம் விளையாடினார். ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியில் 1994-ல் லாங்கர் இடம் பிடித்தார். எனினும் 1997-க்குப் பிறகு அவருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.
2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மட்டும் இவர் ஒரு ஓவர் வீசியுள்ளார். இதேபோல் 8 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் ஆட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 54.22.
லாங்கர் 2007-ம் ஆண்டு ஆஷஸ் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதம், 30 அரைசதம் உள்பட 7,696 ரன்களையும், 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 160 ரன்களையும் எடுத்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார்.
0 comments:
Post a Comment