நவீன பிராட்மேன் சச்சின் - லாரா

கிரிக்கெட் அரங்கின் தற்கால டான் பிராட்மேன் சச்சின் தான்,'' என, புகழாரம் சூட்டியுள்ளார் பிரையன் லாரா.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா. இதுவரை 131 டெஸ்ட் (11953 ரன்கள்), 299 ஒரு நாள் (10405 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். துபாயில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த லாரா, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து லாரா கூறியது:

ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் இருவருமே மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். இருவரையும் வேறுபடுத்த விரும்ப வில்லை. ஆனால் 16 வயது முதல் 37 வயது வரை 21 ஆண்டுகளாக வெகு நீண்ட காலம் கிரிக்கெட் அரங்கில் சச்சின் அசத்தி வருகிறார். இதை நினைக்கும் போது ஆச்சரியம் அளிக்கிறது.

பிராட்மேனின் பேட்டிங் சராசரி (99.96), சச்சினை காட்டிலும் அதிகம் தான். இருப்பினும் அந்தக் காலக்கட்டத்தில் ஆட்டத்தின் தன்மை வேறுவிதமாக இருந்தது. தற்காலத்தில் வேறுவிதமாக உள்ளது. அக்காலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்களிடம் இது குறித்து கேட்ட போது, " இப்போது பிராட்மேன் விளையாடியிருந்தால், 90 சதவீதம் சராசரி பெற்றிருக்க முடியாது' என்று என்னிடம் தெரிவித்தனர்.

அதனால் தான் சச்சினை தற்கால பிராட்மேன் என உறுதியாக கூறுகிறேன்.

ஜிம்பாப்வேயில் நடக்கும் "டுவென்டி-20' போட்டிகளில் தற்போது பங்கேற்று வருகிறேன். தவிர, ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு, பேட்டிங் ஆலோசனைகளை அளித்து வருகிறேன். கோல்ப் விளையாட்டில் தற்சமயம் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

இவ்வாறு லாரா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment