சூடுபிடிக்கும் ஐ.பி.எல்., ஏலம்!

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களும் பரபரப்பானவை தான். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், இந்திய கிரிக்கெட் போர்டால் (பி.சி.சி.ஐ.,) ஏற்படுத்தப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு மூலம், கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ள வீரர்கள் ஏலம், புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு ஐ.பி.எல்., அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது 8 அணிகள் சேர்க்கப்பட்டன. இந்த அணிகள் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

இவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் (2010) முடிந்து விட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், மறுபடியும் வீரர்கள் ஏலம் (ஜன. 8) நடக்க உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள், அணி மாற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடி நீக்கம்:

இந்த முறை கொச்சி மற்றும் புனே என 2 அணிகள் புதியதாக இணைக்கப்பட்டன. இதனால் 10 அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறிய கூறி, ராஜஸ்தான் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் உரிமையை பி.சி.சி.ஐ., ரத்து செய்தது. இதனால் 8 அணிகள் மட்டுமே இந்த முறையும் பங்கேற்க உள்ளன. இதில், கொச்சி அணியின் உரிமை இழுபறியில் உள்ளது.

புதிய ஏலம்:

ஐ.பி.எல்., புதிய ஏலத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள 8 அணிகளும், தங்கள் அணிகளில் 3 ஆண்டுகளாக விளையாடி வரும் வீரர்களில் 4 பேரை மட்டும் தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். மற்ற வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவர்.

62 வீரர்கள்:

கடந்த முறை நடந்த ஏலத்தில் சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங் உள்ளிட்டோருக்கு நட்சத்திர வீரர்கள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இம்முறை வீரர்கள் தரத்தினைக் கொண்டு, பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் படி முதல் பிரிவில் சச்சின், தோனி, சேவக், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வீரர்களுக்கு அடிப்படை விலையாக 1.84 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளனர். இதில் சச்சின் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் தோனியை (சென்னை சூப்பர் கிங்ஸ்) அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.

இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 1.3 கோடி ரூபாய் அடிப்படை விலை. இதில் யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, ஜாகிர் கான் இடம் பெற்றுள்ளனர். கங்குலி, டிராவிட், கும்ளே, லட்சுமண், காம்பிர், விராத் கோஹ்லி உள்ளிட்டோர் மூன்றாவது வகையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை விலை 92 லட்சம் ரூபாய்.

சகா, மனோஜ் திவாரி, அசோக் டின்டா, சத்தீஸ்வர் புஜாரா உள்ளிட்ட பல வீரர்கள் நான்காவது பிரிவில் (ரூ. 46 லட்சம்) உள்ளனர். ஐந்தாவது மற்றும் கடைசி பிரிவில் (ரூ. 23 லட்சம்) மன்பிரீத் கோனி, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர். இந்த ஏலத்தில் மொத்தம் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் உரிமைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் வீரர் யூசுப் பதான், பஞ்சாப் அணியின் யுவராஜ் ஆகியோருக்கு மவுசு அதிகரித்துள்ளது.

கங்குலிக்கு கல்தா:

கோல்கட்டா நைட் ரைடர்ஸ் நிர்வாகம், தங்கம் அணியில் ஏற்கனவே உள்ள வீரர்களை வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக அணியின் கேப்டன் கங்குலிக்கு, கல்தா கொடுக்க முடிவு செய்துள்ளது. இதே போல, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராகுல் டிராவிட்டை கழற்றி விட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மல்லையா எதிர்ப்பு:

ஐ.பி.எல்., புதிய ஏல நடைமுறைக்கு, அணியின் உரிமையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக அணியை சிறப்பான முறையில் தேர்வு செய்து வைத்திருந்தோம். இந்நிலையில், புதிய ஏலத்தின் காரணமாக பெரும்பாலான வீரர்கள் அணி மாற வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பின்னடைவு ஏற்படும் என அவர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறுகையில்,"" ஐ.பி.எல்., ஏலம் குறித்த பி.சி.சி.ஐ., யின் நடைமுறை மாற்றம், பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. அணியின் உரிமையாளர்களிடம் எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தாமல், பி.சி.சி.ஐ., தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. இது கண்டிக்கத் தக்கது,'' என்றார்.

0 comments:

Post a Comment