IPL 4 - காம்பீர், யுவராஜ், டிராவிட், கங்குலி, கும்ப்ளே நீக்கம்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடை பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக 4 பேரை வைத்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்தது. அணிகள் வைத்துக்கொள்ளும் வீரர்களை நேற்றுக்குள் (8-ந்தேதி) முடிவு செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மட்டும் ஏற்கனவே விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளன.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்கல் ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், மலிங்கா, போலர்ட் ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2011 மற்றும் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் அந்த அணிகளில் தொடர்ந்து ஆடுவார்கள்.

மற்ற முன்னணி வீரர்களான காம்பீர் (டெல்லி டேர்டெவல்ஸ்), யுவராஜ்சிங் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ராகுல்டிராவிட், கும்ப்ளே (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), கங்குலி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் அந்தந்த அணிகளில் இருந்து கழற்றி விடப்பட்டனர். அவர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றனர்.

இதேபோல முன்னணி வேகப்பந்து வீரர்களான ஜாகீர்கான் (மும்பை இந்தியன்ஸ்), இஷாந்த் சர்மா (கொல்கத்தா) ஆகியோரும் அந்த அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஷேவாக் டெல்லி அணியிலும், வீரட் கோக்லி பெங்களூர் அணியிலும், கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் நீடிக்கிறார்கள்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி எந்த வீரரையும் வைத் துக்கொள்ளவில்லை. அந்த அணியில் ரோகித் சர்மா, கில்கிறிஸ்ட் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. ஆனால் கோர்ட்டு இந்த அணிகளின் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இந்த 2 அணிகளும் பங்கேற்கலாம். கிரிக்கெட் வாரியம் இதை எதிர்த்து முறையீடு செய்து உள்ளது. புதிதாக கொச்சி, புனே அணிகள் பங்கேற்கின்றன.

இதனால் 4-வது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகளா? அல்லது 10 அணிகளா? விளையாடும் என்பது உறுதியாக தெரியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே விளையாடிய வீரர்களில் வாட்சன், வார்னே ஆகியோரை தொடர்ந்து ஒப்பந்தத்தில் வைத்து இருப்பதாக அறி வித்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் யூசுப்பதான் நீட்டிக்கப்படவில்லை. ஏலத்தில் அவருக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று தெரிகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் யாரையும் தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அந்த அணி நிர்வாகம் யுவராஜ் சிங், சங்ககரா, ஜெயவர்த்தனே ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.

0 comments:

Post a Comment