ஐ.பி.எல்., தொடரில் லாரா

ஐ.பி.எல்., தொடரில் விளையாட பிரையன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் லாரா. 131 டெஸ்ட் போட்டிகளில் 11, 953 ரன் மற்றும் 299 ஒரு நாள் போட்டிகளில் 10,405 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2007ல் ஓய்வு பெற்றார்.

பின் கபில் தேவ் தலைமையிலான, சர்ச்சைக்குரிய இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்பில் சேர்ந்தார். இதில், மும்பை சேம்ப்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். ஐ.சி.சி., தடை காரணமாக ஐ.சி.எல்., அமைப்பு சிதைந்து போனது.

இந்திய கிரிக்கெட் போர்டு துவக்கிய இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு அசுர வளர்ச்சி கண்டது. தற்போது 41 வயதான லாரா, ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் வார்ன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டீபன் பிளமிங் போல, அணிகளுக்கு வழிகாட்டும் குருவாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாரா கூறியது:

வரும் 2011ல் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க தயாராக உள்ளேன். இதனை மனதில் வைத்து, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும். அப்போது தான் உடல் தகுதியை மேம்படுத்த முடியும். ஐ.பி.எல்., தொடரில் இளம் வீரர்களுடன் போட்டியிட விரும்பவில்லை.

விளையாடும் "லெவனில்' இடம் பெறாவிட்டாலும் கூட, அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். வீரராக மட்டும் அல்லாமல் நல்ல ஆலோசகராகவும் பணியாற்ற ஆசைப்படுகிறேன்.

ஐ.சி.எல்., அமைப்பு கிரிக்கெட் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது. யாருக்கும் போட்டியாக துவக்கப்படவில்லை. இதில், கபில்தேவ், டோனி கிரெய்க் போன்ற ஜாம்பான்கள் தொடர்பு வைத்து இருந்தனர். அதனால் தான் நானும் சேர்ந்தேன்.

இறுதியில், அது தவறான முடிவாக அமைந்து விட்டது. ஐ.சி.எல்., போட்டிகளில் பங்கேற்று, ஐ.சி.சி., தடையை சந்திக்க விரும்பவில்லை. ஒரு "சீசன்' மட்டுமே விளையாடினேன். அதற்கு ஐ.சி.எல்., போட்டிகளில் இருந்து விலகி விட்டேன்.

இவ்வாறு லாரா கூறினார்.

0 comments:

Post a Comment