சிறந்த லெக் ஸ்பின்னர்

சிறந்த லெக் ஸ்பின்னராக திகழ்ந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் சந்தனா.

இவர் 1972-ம் ஆண்டு மே 7-ம் தேதி இலங்கையின் காலே நகரில் பிறந்தார். இவர் காலேயில் உள்ள மகிந்தா கல்லூரியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். சிறந்த லெக் ஸ்பின்னர், பேட்ஸ்மேன், பீல்டர் என பன்முகத் திறன் கொண்டவராகத் திகழ்ந்தார்.


1994-ம் ஆண்டு தனது 21-வது வயதில் இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்க 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பாகிஸ்தானுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் 48 ஓவர்களை வீசி 179 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இலங்கையின் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்கி பலமுறை இலங்கை அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 7 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.

2003-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 5-வது வீரராக களமிறங்கி 71 பந்துகளில் 89 ரன்களை குவித்து இலங்கை அணி வெற்றி இலக்கான 313 ரன்களை எட்டுவதற்கு உதவினார்.


2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 616 ரன்களையும், 37 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,627 ரன்களை எடுத்துள்ளதோடு, 151 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

0 comments:

Post a Comment