சச்சினுக்கு கிடைக்குமா லாரஸ் விருது

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் லாரஸ் விருதை (2011) கைப்பற்றும் வாய்ப்பு, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கிடைத்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்கான (2011) இவ்விருதுகள் பிப்ரவரியில் வழங்கப்பட உள்ளன.

இதற்கான விளையாட்டு வீரர்கள் பரிந்துரை பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் இந்த ஆண்டு கிரிக்கெட் அரங்கில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் (எதிர்-தென் ஆப்ரிக்கா, குவாலியர்) எடுத்த முதல் வீரர், டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் (எதிர்-ஆஸ்திரேலியா, பெங்களூரு) உள்ளிட்ட உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இவருடன் இணைந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் பெயரும், லாரஸ் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர், இந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளை (எதிர்-இந்தியா, காலே) வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

இவர்களுடன் டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), "பார்முலா-1' சாம்பியன் செபாஸ்டியன் வெட்டெல் (ஜெர்மனி), கால்பந்து வீரர்களான டீகோ போர்லான் (உருகுவே), இனியஸ்டா (ஸ்பெயின்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கோல்ப் வீரர் கிரீம் மெக்டவல் (அயர்லாந்து) உள்ளிட்டோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களிலிருந்து 6 பேர், லாரஸ் மீடியா தேர்வுக் குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும். பின்னர் இந்த 6 பேரிலிருந்து ஒருவர், ரகசிய ஓட்டெடுப்பின் மூலம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு பெறுவர். விருது வழங்கும் நிகழ்ச்சி பிப். 7 ம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது.

0 comments:

Post a Comment