செஞ்சுரியன் டெஸ்டில் சச்சின் விளாசிய 50வது சதம் மற்றும் இங்கிலாந்து & ஆஸ்திரேலிய அணிகளிடையே நடக்கும் சுவாரசியமான ஆஷஸ் தொடரால் டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயலதிகாரி ஹாரூன் லார்கட் கூறியுள்ளார்.
இது குறித்து துபாயில் நேற்று அவர் கூறியதாவது: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்ற அச்சம் அர்த்தமற்றது. நம்பர் 1 யார் என்பதில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகளிடையே நடக்கும் பலப்பரீட்சை, இங்கிலாந்து & ஆஸ்திரேலிய அணிகளிடையே நடக்கும் ஆஷஸ் மோதல் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்லா நாட்டு ரசிகர்களுமே இந்த தொடர்களை ஆவலோடு பார்த்து வருகின்றனர். ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளை பார்க்க இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மெல்பர்னில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு, 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருப்பது உற்சாகம் அளிக்கிறது.
செஞ்சுரியன் டெஸ்டில் சச்சின் விளாசிய 50வது சதம், அதே டெஸ்டில் காலிஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தது, முரளிதரன் 800 விக்கெட் வீழ்த்தியது,
கிறிஸ் கேல் முச்சதம் விளாசியது என்று இந்த ஆண்டு முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் அபாரமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சுவாரசியமான, விறுவிறுப்பான ஆட்டங்கள் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிதான் டாப் என்பதை நிரூபித்துள்ளன. வெகு விரைவில் அறிமுகமாக உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெறும் என்பதில்
சந்தேகமே இல்லை.
இவ்வாறு லார்கட் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment