சச்சின் சாதனையை நெருங்க முடியுமா?

சச்சினின் 100 சதம் சாதனையை தற்போதுள்ள முன்னணி வீரர்களால் நெருங்கக்கூட முடியாது,'' என, பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குகிறார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் கில்கிறிஸ்ட்.

சச்சின் சாதனை குறித்து இவர் கூறியது:

சச்சின் சிறந்த வீரராக ஜொலிக்கிறார். 22 ஆண்டுகளாக ஒரே விதமாக விளையாடி வருவதால் தான் சிறந்த வீரராக உள்ளார். சச்சினின் 100வது சதம் என்ற சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்பது உண்மையில் சந்தேகம் தான். ஏனெனில், இவருக்கும் மற்றவர்களுக்கு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

உதாரணத்துக்கு ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங்கை எடுத்துக் கொண்டால், சச்சினுக்கு அடுத்து இவர்தான் தற்போது சிறந்த வீரர். இவர் டெஸ்டில் 40, ஒரு நாளில் 30 என, 71 சதம் தான் அடித்துள்ளார். இவரைவிட, சச்சின் 29 சதங்கள் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து பாண்டிங் ஓய்வு பெற்றுவிட்டார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே (3,5), வங்கதேசத்துக்கு (5, 1) எதிராக மட்டும், 14 சதங்கள் சச்சின் அடித்துள்ளார் என்ற விமர்சனங்கள் தவறானது. அப்படிப் பார்த்தாலும், பாண்டிங்கை விட 15 சதங்கள் சச்சின் முன்னிலையில் தான் உள்ளார்.

சிக்கலான நிலை:

தற்போது இந்திய அணி சிக்கலான நிலையில் உள்ளது. டிராவிட் ஓய்வு பெற்று விட்டார். அடுத்து லட்சுமண், சச்சின் கிளம்பும் போது, அணியில் வெற்றிடம் ஏற்படும். இதை நிரப்புவது கடினம். இதேபோன்ற நிலைதான் எங்களுக்கும் ஏற்பட்டது.

கோஹ்லிக்கு பாராட்டு:

சமீபத்திய போட்டிகளில் அடுத்தடுத்து அசத்தி வரும் விராத் கோஹ்லி, வேகமாக வளர்ந்து வருகிறார். உலகின் தற்போதுள்ள சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் டிராவிட்டுக்கு மாற்றாக வருவாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதிகப்படியான "டுவென்டி-20' போட்டிகள் விளையாடியதால் தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் தோல்வி ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது.

ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகவில்லை என்பதே உண்மை. எங்கள் பவுலர்கள் அசத்தியதால், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

பயிற்சியில் பங்கேற்பு:

மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் போட்டியில் சென்னையை சந்திக்கிறது. இதனிடையே, வலது கால் பாதத்தின் முன்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு, சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்ற சச்சின், நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த அணியின் முகாமில் பங்கேற்றார்.

0 comments:

Post a Comment