சச்சின்-டிராவிட் மோதல் உண்மையா?

டிராவிட்டுக்கு நடந்த பாராட்டு விழாவில் சச்சின் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இருவரது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் "பெருஞ்சுவர்' என வர்ணிக்கப்படும் டிராவிட், சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி பி.சி.சி.ஐ., சார்பில் மும்பையில் விழா நடந்தது. இதில், கும்ளே, கேப்டன் தோனி, லட்சுமண், விராத் கோஹ்லி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

ஆனால், சச்சின் மட்டும் கலந்து கொள்ளவில்லை. கால் விரல் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள லண்டன் பறந்து விட்டார். இதையடுத்து பாராட்டு விழாவை சச்சின் திட்டமிட்டு புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகின.

இவ்விழாவில் பேசிய டிராவிட், சச்சின் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் கும்ளே, லட்சுமண், கங்குலி ஆகியோரை புகழ்ந்து பேசினார். இது டிராவிட்-சச்சின் <உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை உணர்த்துவது போல் இருந்தது. இருவர் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகளும் வெளியாகின.

டிராவிட் மறுப்பு:

இதனை மறுத்த டிராவிட் கூறியது:

நானும் சச்சினும் 16 ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். இருவருக்கும் இடையிலான நட்பு அப்படியே தொடர்கிறது. எங்களுக்குள் எவ்வித விரிசலும் இல்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான செய்திகள் எல்லாம் "மீடியா'வின் கற்பனை.

பாராட்டு விழாவில் என்னை வாழ்த்தி பேசியவர்களுக்கு மட்டும் நன்றி சொன்னேன். சச்சின் பங்கேற்காததால், அவரது பெயரை சொல்லவில்லை. இந்த விழாவில் பங்கேற்க முடியாது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமாக ஏற்கனவே சச்சின் தெரிவித்தார். தனது கால் காயத்துக்காக லண்டன் சென்று டாக்டரிடம் ஆலோசனை பெற இருப்பதாக சொன்னார்.

ஐ.பி.எல்., ஆர்வம்:

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குவது பெருமையாக உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த வார்ன் இடத்தை நிரப்புவது கடினம். இவரை தனிப்பட்ட முறையில் "மிஸ்' பண்ணுவேன். சிறப்பாக செயல்பட்டு, தொடரை வெற்றிகரமாக துவக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.

யுவராஜ் இடம் பெறாததும் ஐ.பி.எல்., தொடருக்கு பெரும் இழப்பாக இருக்கும். இவர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் "பிசி'யாகவே உள்ளேன். எனது வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டில் இருப்பது போன்று உணரவில்லை. ஏனென்றால் ஐ.பி.எல்., தொடர் துவங்கப் போகிறது. இதற்காக தயாராக வேண்டும் என்பதால், எப்போதும் போல சுறுசுறுப்பாகவே இருக்கிறேன்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment