தென் ஆப்ரிக்காவுக்கு நம்பர் 1 வாய்ப்பு

நியூசிலாந்துக்கு எதிராக இன்று துவங்கும் டெஸ்ட் தொடரை, தென் ஆப்ரிக்க அணி முழுமையாக வெல்லும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி இன்று டுனிடினில் துவங்குகிறது. சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை 3-0 என வென்ற தென் ஆப்ரிக்க அணியின் அனைத்து வீரர்களும், நல்ல பார்மில் உள்ளனர். கேப்டன் ஸ்மித், ஆம்லா, டிவிலியர்ஸ், காலிஸ், ஸ்டைன் எதிரணிக்கு தொல்லை தருவது நிச்சயம்.

அதேநேரம், ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்தமண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இமாலய வெற்றி பெற்ற உற்சாகத்தில் ராஸ் டெய்லரின் நியூசிலாந்து அணி உள்ளது. இருப்பினும், கப்டில், நிக்கோல், இன்று அறிமுகமாகும் வான் விக் ஆகியோரது அனுபமின்மை சிக்கல் தான்.


முதலிட வாய்ப்பு:

தற்போது டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து (118 புள்ளி), தென் ஆப்ரிக்கா (117), இந்திய (111) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணி (83) எட்டாவது இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை தென் ஆப்ரிக்க அணி முழுமையாக வென்றால், 119 புள்ளிகள் பெற்று "நம்பர்-1' இடத்தை பிடிக்கலாம்.


ரூ. 88 லட்சம் பரிசு:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விதிப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப். 1ம் தேதி, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் "மேஸ்' விருதும், ரூ. 88 லட்சம் பரிசும் வழங்கப்படும். இம்முறை தென் ஆப்ரிக்க அணி, இதை தட்டிச் செல்லலாம்.

ஏனெனில், தற்போது முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, அடுத்து மார்ச் 26ல் தான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இத்தொடர் ஏப். 7ல் தான் முடியும் என்பதால், இங்கிலாந்துக்கு இரண்டாவது இடம் மற்றும் ரூ. 38 லட்சம் பரிசு தான் கிடைக்கும்.

0 comments:

Post a Comment