ஓய்வு எண்ணம் இல்லை - சச்சின் உறுதி

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய வீரர் சச்சின், தனது 100வது சர்வதேச சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் உட்பட பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறியது: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நிறைய சாதனைகளை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இச்சாதனைகள் என்றாவது ஒருநாள் முறியடிக்கப்படலாம். இவைகளை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும் என்பது விருப்பம். எனவே இதனை ஒரு இந்தியரால் மட்டுமே முறியடிக்க முடியும் என நம்புகிறேன்.

ஓய்வு எப்போது:

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு கிடையாது. இது குறித்து நான் மட்டுமே முடிவு செய்வேன். யாரும் ஆலோசனை கூறத் தேவையில்லை. ஏனெனில், இளம் வயதில் கிரிக்கெட் விளையாட முடிவு செய்த போது யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை.

ஓய்வு குறித்து ஆலோசனை கூறும் எவரும், அணியில் இடம் வாங்கி கொடுக்கவில்லை. சரியான நேரத்தில் எனது ஓய்வை முறைப்படி அறிவிப்பேன். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஓய்வை அறிவித்துவிடுங்கள் என சிலர் கூறுகின்றனர். ஒரு வீரர், நல்ல "பார்மில்' இருக்கும் போது ஓய்வை அறிவிப்பது சுயநலம். இந்த நேரத்தில் தான் தனது திறமையை நாட்டுக்காக அர்ப்பணிக்க முடியும்.

அணிக்கு முன்னுரிமை:

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 100வது சதம் அடித்த போதும், அதனை பெரிதாக கொண்டாட முடியவில்லை. ஏனெனில் சொந்த சாதனையை காட்டிலும், அணியின் வெற்றியே முக்கியம். இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், சாதனை குறித்து சிந்திக்கவில்லை.

சிறந்த பரிசு:

முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், சிறந்த டெஸ்ட் கனவு அணியை அறிவித்தார். அதில் எனது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனை என்வாழ்நாளில் கிடைத்த சிறந்த பரிசாக கருதுகிறேன்.

"ஹீரோ' தந்தை:

என் தந்தை தான் எனக்கு "ஹீரோ'. ஏனெனில் அவரில்லாமல், நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. இவர், எனது வெற்றி, தோல்விகளின் போது உடனிருந்து நிறைய ஆலோசனைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இவரது ஆலோசனைகள், கிரிக்கெட்டில் சாதிக்க உதவியது.

நிறையவேறிய கனவு:

இந்திய அணிக்காக விளையாட வேண்டும், உலக கோப்பை வென்று தர வேண்டும் என்பது இளமை பருவ கனவு. இவை இரண்டு நிறைவேறின. என் வாழ்வில் இதை விட சிறந்தது வேறொன்றும் இல்லை என நினைக்கிறேன். கிரிக்கெட் போட்டியை முழுமனதுடன் நேசித்ததால் மட்டுமே சிறப்பாக விளையாட முடிகிறது. என்னால் முடிந்த வரை இந்திய அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்.

2015 உலக கோப்பை:

வரும் 2015ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முன்னதாக கடந்த 2007ல், வரும் 2011 நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் விளையாடுவீர்களா எனக் கேட்டனர். இதேபோல அப்போது என்னால் பதில் கூற முடியவில்லை. ஆனால், 2011ல் விளையாடினேன். எனவே எதிர்காலம் குறித்து என் கையில் ஒன்றுமில்லை. கடவுள் தான் பதில் சொல்ல முடியும்.

22 ஆண்டுகள்:

உலக கோப்பை தொடரில், 99வது சதம் அடித்தேன். அப்போது யாரும் 100வது சதம் குறித்து அதிகம் பேசவில்லை. அனைவரது கவனமும் இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் உலக கோப்பைக்கு பின், 100வது சதம் குறித்து மீடியாவில் அதிகளவில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் எனது கவனம் முழுவதும் இந்திய அணிக்காக விளையாடுவதில் மட்டுமே இருந்தது. உலக கோப்பைக்காக 22 ஆண்டுகள் காத்திருந்த எனக்கு, 100வது சதம் அடிக்க ஒரு ஆண்டு காத்திருந்ததில் எவ்வித கவலையும் இல்லை.

காயத்தால் பாதிப்பு:

கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது, முன்னணி வீரர்கள் நிறைய பேர் காயமடைந்ததால், மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. இதேபோல ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக, வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனவே வரும் தொடர்களில் காயம், உடற்தகுதி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து இந்திய வீரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு மீண்டும் "நம்பர்-1' அந்தஸ்தை பெற்றுத் தர முடியும்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

0 comments:

Post a Comment