ஹாட்ரிக் தோல்வியடைந்த அவமானத்தில், இலங்கை அணி

ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தகுதி பெற்றன. இன்று நடந்த கடைசி லீக் போட்டியில், வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி, இன்று மிர்புரில் நடக்கிறது. "டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், பவுலிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா (5), சங்ககரா (6) ரன்களுக்கு அவுட்டாகினர். தில்ஷன் (19), கபுகேதிரா (62), திரிமான்னே (48), தரங்கா (48) ஆறுதல் தந்தனர். இலங்கை அணி 49.4 ஓவரில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


இலக்கு மாற்றம்:

உணவு இடைவேளையின் போது மழை பெய்ததால், "டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி, 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என, இலக்கு மாற்றப்பட்டது. வங்கதேச அணியின் நஜிமுதீன் (6), இஸ்லாம் (2), முஷ்பிகுரும் (1) ஏமாற்றினர்.

பின் தமிம் இக்பால் (59), சாகிப் அல் ஹசன் (56) அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் மகமதுல்லா (32), நாசிர் ஹொசைன் (36) கைகொடுக்க, வங்கதேச அணி 37.1 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பைனலில் வங்கதேசம்:

இந்த வெற்றியை அடுத்து, 8 புள்ளிகள் பெற்ற வங்கதேசஅணி, வரும் 22ம் தேதி நடக்கும் பைனலில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்திய அணி 8 புள்ளிகள் பெற்ற போதும், லீக் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றதால், பைனல் வாய்ப்பை இழந்தது.

இத்தொடரில் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும், "ஹாட்ரிக் தோல்வியடைந்த அவமானத்தில், இலங்கை அணியும் வெளியேறியது.

0 comments:

Post a Comment