டிராவிட் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

டிராவிட் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்று தெண்டுல்கர் புகழாரம் சூட்டினார். இந்திய கிரிக்கெட் அணியின் கிரேட் வால் (பெருஞ்சுவர்) என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

இப்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து இவரை புறக்கணித்து வந்ததால், இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட்டின் ஓய்வு அறிவிப்பு பற்றி, 'மாஸ்டர்' பேட்ஸ்மேன் தெண்டுல்கர் கூறியதாவது:-

போட்டிகளில் மத்திய நிலை ஆட்டக்காரராக இறங்கி டிராவிட் என்னோடு விளையாடுவார். இப்போது இந்த தருணத்தை நான் இழந்துள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து பல தடவை 'செஞ்சுரி' அடித்துள்ளோம். அணியில் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அப்படிபட்ட சாதனையாளருக்கு வெறும் பாராட்டுகள், புகழ் மாலைகள் மட்டும் போதாது என்று கருதுகிறேன். அவர் வேறு வகைகளில் கவுரவப் படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிப்பில் தெண்டுல்கருக்கு அடுத்த நிலையில் டிராவிட் உள்ளார். அவர் 164 போட்டிகளில் விளையாடி 13,288 ரன் குவித்துள்ளார். (சராசரி 52.31) இதில் 36 சதங்களும், 63 அரை சதங்களும் அடங்கும்.

ஒரு நாள் போட்டிகளில் 344 ஆட்டங்களில் பங்கேற்று, 10,899 ரன் குவித்துள்ளார். (சராசரி 39.16) இதில் 12 சதங் களும் 83 அரை சதங்களும் அடங்கும்.

இத்தருணத்தில் இந்திய அணியின் சுவருக்கு மாலைமலர் இணையதளம் அதன் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

0 comments:

Post a Comment