தோல்வி சோகத்தில் தாயகம் வந்த இந்திய வீரர்கள்

கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் மிக மோசமான தோல்வியை சந்தித்த சோகத்தில் இந்திய வீரர்கள் நேற்று நாடு திரும்பினர்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 0-4 என முழுமையாக இழந்தது.

அடுத்து நடந்த "டுவென்டி-20' தொடரை 1-1 என "டிரா' செய்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்ற 8 லீக் போட்டிகளில், மூன்றில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணியால் பைனலுக்கு முன்னேற முடியவில்லை.

"உலக சாம்பியன்' இந்திய அணி, பைனல் வாய்ப்புக்கு மற்ற அணிகளின் முடிவை எதிர்பார்த்திருக்க வேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது. முன்னணி வீரர்கள் சச்சின், டிராவிட், சேவக், கேப்டன் தோனி இருந்தும் இந்திய அணி ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. பேட்டிங், பவுலிங் என அனைவரும் சொதப்பினர்.

இளம் விராத் கோஹ்லி மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், வினய் குமார் சற்று ஆறுதல் தந்தனர். இடையில் அணியில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிளவும், வெற்றி வாய்ப்பை பாதித்தது.


இந்தியா வந்தனர்:

இதனிடையே இந்திய வீரர்கள் சச்சின், ஜாகிர் கான், ரோகித் சர்மா, உமேஷ் யாதவ், வினய் குமார், அஷ்வின் மற்றும் அனைத்து சக அலுவலர்களும் நேற்று காலை சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மும்பை, சென்னை விமானங்களை பிடித்து இந்தியா வந்தனர்.

இரண்டாவது பிரிவாக கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, சேவக், காம்பிர், ரெய்னா, பிரவீண் குமார், ராகுல் சர்மா ஆகியோர் நேற்று மதியம் பிரிஸ்பேனில் இருந்து சிங்கப்பூர் வந்து, டில்லி விமானத்தில் இந்தியா வந்தனர்.

இர்பான் பதான், பார்த்திவ் படேல் இருவரும் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்புகின்றனர்.


மோசமான தொடர்:

இந்திய அணி கடந்த 1967-68ல் பங்கேற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரை, 0-4 என முழுமையாக இழந்தது. தற்போது 45 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடரை 0-4 என இழந்து வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது.

0 comments:

Post a Comment