உலக கோப்பை: வெற்றியை கணிக்கும் "ஆக்டோபஸ்'

 நம்மூரில் கிளி ஜோதிடம் போல, ஐரோப்பிய நாடுகளில் "ஆக்டோபஸ்' கணிப்பு மிகவும் பிரபலம். இம்முறை உலக கோப்பை காலிறுதியில் ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று அதிரடியாக கணித்துள்ளது. இதனால் அர்ஜென்டினா அணியினர் கதிகலங்கிப் போயுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. வரும் ஜூலை 3ம் தேதி நடக்கும் காலிறுதியில் முன்னாள் சாம்பியன்களாக ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. 

இரண்டுமே ஐரோப்பிய அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மாரடோனா பயிற்சியில் அர்ஜென்டினா சாதிக்கும் என கால்பந்து நிபுணர்கள் குறிப்பிட்டனர். இதற்கு நேர்மாறாக "ஆக்டோபஸ்' கணிப்பு அமைந்துள்ளது.

ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்கு இரண்டு வயதான ஆக்டோபஸ், கால்பந்து போட்டிகளின் வெற்றியாளரை துல்லியமாக கணிக்கிறது. பால் என்ற பெயரிலான இந்த "ஆக்டோபஸ்' இம்முறை உலக கோப்பை தொடரில் ஜெர்மனி பங்கேற்ற போட்டிகளின் வெற்றி தோல்விகளை சரியாக கணித்தது. 

அதாவது, லீக் சுற்றில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியா மற்றும் கானாவை வீழ்த்தும் என குறிப்பிட்டது. இதே போல செர்பியாவிடம் தோல்வி அடையும் என்றும் சுட்டிக் காட்டியது. தவிர, "ரவுண்ட்-16' போட்டியில் இங்கிலாந்தை வென்று, காலிறுதிக்கு முன்னேறும் என்று தெளிவாக சொன்னது. 

இதையடுத்து காலிறுதியில் ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை வீழத்துமா என்ற கேள்வி எழுந்தது. உடனே "ஆக்டோபசிடம்' கேட்டனர். இதற்கு வழக்கம் போல் இரண்டு கண்ணாடி பெட்டிகள் வைக்கப்பட்டன. உள்ளே ஒரு சிப்பி வைக்கப்பட்டது. 

இம்முறை "ஆக்டோபஸ்' மிக நீண்ட நேரம் யோசித்த பின் ஜெர்மனி கொடி வரையப்பட்ட பெட்டியில் இருந்த சிப்பியை எடுத்தது. இதன் மூலம் ஜெர்மனி அணிக்கே வெற்றி என்பதை கணித்தது. 

இது குறித்து கண்காட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கடந்த 2008ல் நடந்த "யூரோ' கோப்பை தொடரில் ஜெர்மனி அணியின் செயல்பாடு தொடர்பான "ஆக்டோபஸ்' கணிப்பு 80 சதவீதம் சரியாக இருந்தது. இம்முறை சுமார் ஒரு மணி நேரம் யோசித்த பின் தான் ஜெர்மனி அணியின் பெட்டியை தேர்வு செய்தது. எனவே, காலிறுதி போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும்,''என்றார்.

0 comments:

Post a Comment