ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டம் இல்லை

ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டத்தை தடுக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சூதாட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பது போன்ற கருத்துக்கள் முட்டாள்தனமானது,'' என, ஐ.பி.எல்., துணைத்தலைவர் நிரஞ்சன் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரில், புக்கிகள் வீரர்களை எளிதில் அணுக முடியும் என்பதால், சூதாட்டம் நடக்க அதிக வாய்ப்புள்ளது என, ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் தெரிவித்து இருந்தார். இதை மறுத்து நிரஞ்சன் ஷா கூறியது:

ஒருசில வீரர்கள் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென்றாலும் கூட, தேவையில்லாமல் பேசுவதை, மோசமான பழக்கமாக வைத்துள்ளனர். அந்த பேச்சு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றெல்லாம் நினைப்பதில்லை. தாங்கள் என்ன பேசுகிறோம் என நினைக்காமல், ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசிவிட்டு செல்கிறார்கள்.

சுத்தமான தொடர்:

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஊழலற்றது. அதுபோல ஐ.பி.எல்., தொடரும் சுத்தமாக இருக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் பால் கான்டன் கூட, மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் சுத்தமானது. இதில் சூதாட்டம் நடந்திருப்பதுக்கு வாய்ப்பே இல்லை என தெளிவாக தெரிவித்துள்ளார். 

காரணம் தெரியவில்லை:

தொடரின் போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவை, பணியில் ஈடுபடுத்துவதுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அடுத்த நான்காவது தொடருக்கும் அவர்களை மீண்டும் நியமிக்கவுள்ளோம். இந்நிலையில் கில்கிறிஸ்ட் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது, முட்டாள்தனமானது. என்ன அர்த்தத்தில் இப்படி பேசினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment