கேரளாவை பிரியும் ஸ்ரீசாந்த்

கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால், வரவிருக்கும் ரஞ்சிக்கோப்பை தொடரில், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கேரள அணியில் இருந்து விலகி வேறு அணியில் விளையாட உள்ளார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். களத்தில் "ஆக்ரோஷமாக' விளையாடி, எதிரணியினரை "சீண்டுவதில்' வல்லவர். தற்போது மோசமான "பார்ம்' காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே சமீபத்தில் கேரள அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் இவர் நீக்கப்பட்டார். எதிர்வரும் ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களுக்கு, "ஆல்-ரவுண்டர்' ரெய்பி வின்சென்ட் கோம்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 25 பேர் அடங்கிய உத்தேச அணியில், ஸ்ரீசாந்தும் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது, இவரை பெரிதும் பாதித்துவிட்டது எனத் தெரிகிறது. 

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியது:

நான் அதிகளவில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். தேசிய அணியில் மீண்டும் இடம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக என்னை நிரூபித்து கடினமாக முயற்சி செய்து வருகிறேன். 

கடந்த சீசனில் கேரள அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டேன். அதில் இறுதி முடிவுகளை நான் எடுக்கவில்லை. எதிர்வரும் தொடர்களில், வேறு மாநில அணியில் இணைந்து விளையாடி முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

இதுகுறித்து கேரள கிரிக்கெட் சங்கத்தின் (கே.சி.ஏ.,) செயலர் டி.சி.மாத்யூ கூறுகையில்,"" கேப்டன் 
பதவிதான் வேண்டும் என, எந்த வீரரும் வற்புறுத்த முடியாது. ஸ்ரீசாந்த் வேறுமாநில அணிக்கு செல்ல விரும்பினால் எங்களிடம், அனுமதி கடிதம் பெறவேண்டும். இதுகுறித்து அவர் எங்களை அணுகினால், கே.சி.ஏ.,வின் மத்திய கவுன்சில் விவாதித்து, பின் முடிவெடுக்கும்,'' என்றார்.

1 comments:

  1. பிற மாநில அணிக்கு ஆட இவ்வளவு சிக்கல் இருக்கா...உணர்ச்சி கொப்பளிக்கும் மனிதர் .பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete