அர்ஜென்டினா அபார வெற்றி: வெளியேறியது கிரீஸ்

கிரீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், மாரடோனாவை பயிற்சியாளராக கொண்ட அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 9 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதல் அணியாக "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட கிரீஸ் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் போலோக்வானியில் நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, கிரீஸ் (13வது இடம்) அணிகள் மோதின.

போட்டியின் துவக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய கிரீஸ் அணி ஆட்டத்தின் 14வது, 18வது நிமிடத்தில் கிடைத்த "கார்னர் கிக்' வாய்ப்பை வீணடித்தது. இதேபோல 19வது, 32வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி, "கார்னர் கிக்' வாய்ப்பை கோட்டைவிட்டார். இதனால் முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி பரிதாபமாக இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அர்ஜென்டினா அணிக்கு டிமிசெலிஸ் (77வது நிமிடம்), பாலர்மோ (89வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து போராடிய கிரீஸ் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக மெஸ்சி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் லீக் சுற்றில் விளையாடிய மூன்று போட்டியிலும் வெற்றி கண்ட அர்ஜென்டினா அணி, 9 புள்ளிகளுடன் "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு "பி' பிரிவிலிருந்து முதல் அணியாக முன்னேறியது.

அர்ஜென்டினா-மெக்சிகோ மோதல்:

"ரவுண்ட் ஆப் 16' சுற்றில், வரும் 27ம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா அணி, "ஏ' பிரிவில் 2வது இடம் பிடித்த மெக்சிகோ அணியை சந்திக்கிறது.

0 comments:

Post a Comment