இங்கிலாந்துக்கு கோப்பை பெற்றுத் தந்தவர்

1966-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை இங்கிலாந்துக்கு பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் பாபி மூர்.

இவர் 1941-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்தின் பார்கிங் நகரில் பிறந்தார். பள்ளியில் படித்தபோது பள்ளி அணிக்காக கால்பந்து விளையாடினார். இளம் வயதிலேயே மிகச்சிறந்த தடுப்பாட்டக்காரராக திகழ்ந்த மூர், 1956-ம் ஆண்டு வெஸ்ட் ஹாம் யுனைட்டெடு அணிக்காகவும், பின்னர் மான்செஸ்டர் யுனைட்டெடு அணிக்காகவும் விளையாடினார்.

தலையால் முட்டியும், உயரமாக துள்ளிக்குதித்தும் எதிரணியினரிடம் இருந்து பந்தை லாவகமாக பறிக்கும் அசாத்திய திறமைபெற்றவர். கால்பந்து மட்டுமன்றி கிரிக்கெட்டிலும் கை தேர்ந்தவர். இங்கிலாந்தின் எஸ்ùஸக்ஸ் அணிக்காக சில காலம் கிரிக்கெட் விளையாடினார். 1960-ம் ஆண்டு 23 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்தார்.

பின்னர் இங்கிலாந்து கால்பந்து அணிக்குள் நுழைந்தார். 1962-ம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஜானி ஹெய்ன்ஸ் ஓய்வுபெற்றதையடுத்து மூர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அப்போது மூர் 12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இங்கிலாந்தின் இளம் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி பல்வேறு ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியது. 1966-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூர் தலைமையில் பங்கேற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதனால் இங்கிலாந்தின் செல்லப்பிள்ளையானார்.

1970-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய மூர் தலைமையிலான அணி காலிறுதி வரை முன்னேறியது. தொடர்ந்து 108 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சிறப்பையும் மூர் பெற்றார். இவரது இந்த சாதனையை பின்னர் பீட்டர் ஷில்டான் (125 ஆட்டங்களில் கேப்டன்), டேவிட் பெக்காம் (109) ஆகியோர் தகர்த்தனர்.

கால்பந்தில் ஓய்வுபெற்ற பிறகு பல்வேறு கால்பந்து கிளப்புகளில் மேலாளராக பணியாற்றினார்.  
1990-ம் ஆண்டு லண்டன் வானொலியில் கால்பந்து வர்ணனையாளராக பணியாற்றினர். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் சகாப்தத்தை ஏற்படுத்திய மூர், 1993-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

0 comments:

Post a Comment