உலக கோப்பை கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்மில்லை. ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். இவர்களில் "டாப்-10' வீரர்கள் வருமாறு:
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்)
மத்திய கள வீரரான இவர், உலககோப்பையில் உற்று நோக்கப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார். ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக ரூ. 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், 2008ல் "பிபா' வழங்கிய உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார்,
போர்ச்சுகல் அணி சார்பில் 68 போட்டிகளில் பங்கேற்று 22 கோல்கள் அடித்துள்ளார். வெகு தூரத்திலிருந்து கோல் அடிக்கும் திறமை பெற்ற இவர், "பிரீ-கிக்', "பெனால்டி கிக்' அடிப்பதில் வல்லவர்.
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-25
லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா)
பார்சிலோனா கிளப் அணி சார்பில் விளையாடி வரும் மெஸ்சி, முன்கள வீரராக அசத்தக் கூடியவர். அர்ஜென்டினா அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 13 கோல்கள் அடித்துள்ளார். எதிரணி வீரர்களின் தடுப்பை தகர்க்க கூடிய இவர், தலையால் முட்டிக் கோல் அடிப்பதில் கை தேர்ந்தவர்.
கடந்த 2009 ம் ஆண்டு "பிபா' வழங்கிய உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை மெஸ்சி வென்றுள்ளார். உலககோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது யார் என்பதில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-22
வேய்ன் ரூனே (இங்கிலாந்து)
கால்பந்து அரங்கில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் வேய்ன் ரூனே. முன்களத்தில் மிரட்டக் கூடிய இவர், எதிரணிகளின் வியூகத்தை நொடிப் பொழுதில் தகர்த்தெறியும் திறமை படைத்தவர். பம்பரமாய் சுழன்று ஆடக் கூடிய இவர், எதிரணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடியவர். இங்கிலாந்து அணி சார்பில் 57 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 25 கோல்கள் அடித்துள்ளார்.
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-இல்லை, வயது-24
காகா (பிரேசில்)
திறமையான நடுக்கள வீரர் காகா. அனைவரும் ரசிக்கக் கூடிய விதத்தில் விளையாட்டு உணர்வுடன் ஆடக் கூடியவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், நீண்ட காலமாக மிலன் கிளப் அணிக்காக விளையாடியவர். தற்போது ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ, ரொனால்டினோ ஆகியோர் இந்த முறை பிரேசில் அணியில் இடம் பெறவில்லை.
இதனால் சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பிரேசில் அணி சார்பில் இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 26 கோல்கள் அடித்துள்ளார்.
உலககோப்பை-2 முறை (2002, 2006), கோல்-1, வயது-27
பெர்னாண்டோ டோரஸ் (ஸ்பெயின்)
பெர்னாண்டோ டோரஸ் தனது 7வது வயது முதல் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். 10 வது வயதில் 55 கோல்கள் அடித்து அசத்தினார். லிவர் பூல் கிளப் அணி அசத்திவரும் இவர், கோல் அடிப்பதில் வல்லவர். கோல் அடிப்பதற்காகவே பிறந்தவர் என போற்றப்படக் கூடியவர். அதிரடி மட்டுமின்றி மிகவும் நுணக்கமாக ஆடக் கூடிய திறமை படைத்தவர். முன் கள வீரரான இவர், பந்தை "பாஸ்' செய்வதில் கில்லாடி. ஸ்பெயின் அணி சார்பில் 71 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 23 கோல்கள் அடித்துள்ளார்.
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-3, வயது-25
சாமுவேல் இடோ (கேமரூன்)
ஆப்ரிக்க கண்டத்தின் மிகச் சிறந்த முன் கள வீரராக கருதப்படுகிறார் கேமரூனின் சாமுவேல் இடோ. தனது 16 வயதில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், கிளப் போட்டிகளில் 108 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். தற்போது இன்டர் மிலன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றுள்ள இவர், சாதித்துக் காட்டுவதில் உறுதியாக உள்ளார். கேமரூன் அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 44 கோல்கள் அடித்துள்ளார்.
உலககோப்பை-2 முறை (1998, 2002), கோல்-1, வயது-28
ஆண்டர்சன் டிகோ (போர்ச்சுகல்)
போர்ச்சுகல் அணியின் அனுபவ வீரர் ஆன்டர்சன் டிகோ. செல்சியா கிளப் அணி சார்பில் அசத்தி வரும் இவர், கடந்த உலககோப்பை (2006) தொடரில் அசத்தினார். மத்திய கள வீரரான டிகோ, பந்தை "பாஸ்' செய்வதில் திறமை மிக்கவர். எதிரணி வீரர்களின் தடுப்பை மிக எளிதாக தகர்ப்பவர். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பின், போர்ச்சுகல் அணி சார்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார் டிகோ.
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-32
கார்லஸ் டெவேஸ் (அர்ஜென்டினா)
அர்ஜென்டினாவின் சிறந்த முன்கள வீரர் கார்லஸ் டேவேஸ். மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர வீரரான இவர், துல்லியமாக கோல் அடிப்பதில் சிறந்தவர். அர்ஜென்டினா அணி சார்பில், 51 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 8 கோல்கள் அடித்துள்ளார். அணியின் பயிற்சியாளர் மாரடோனா, இந்த முறை உலககோப்பையில் டேவேசை மிகவும் நம்பியுள்ளார். எதிர்பார்த்த படி, டேவேஸ் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலககோப்பை- ஒரு முறை (2006), கோல்-1, வயது-26
தியரி ஹென்றி (பிரான்ஸ்)
முன்கள வீரரான தியரி ஹென்றி, சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகிறார். உலககோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் போது, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், தனது கையால் கோலடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் உலககோப்பைக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து வாய்ப்பை இழந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்காக ஹென்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தற்போது 32 வயதானாலும் இவரது ஆட்டத்தின் வேகம் குறையவில்லை. மிகவும் "ரிலாக்சாக' ஆடக் கூடியவர். பிரான்ஸ் அணி சார்பில் 114 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 51 கோல்கள் அடித்துள்ளார்.
உலககோப்பை-3 முறை (1998, 2002, 2006), கோல்-6, வயது-32
மிராஸ்லாவ் குளோஸ் (ஜெர்மனி)
அதிரடி ஆட்டக்காரர் மிராஸ்லாவ் குளோஸ், இதுவரை விளையாடிய 2 உலககோப்பை தொடர்களில் தலா 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இச்சாதனை படைத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் குளோஸ். தலையால் முட்டிக் கோல் அடிப்பது இவரது தனிச் சிறப்பு. பேயர்ன் முனிக் கிளப் அணி சார்பில் விளையாடி வருகிறார். இதுவரை ஜெர்மனி சார்பில் 93 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 48 கோல்கள் அடித்துள்ளார்.
உலககோப்பை- 2 முறை (2002, 2006), கோல்-10, வயது-31
ஆன்ட்ரே பிர்லோ (இத்தாலி)
மத்திய கள வீரரான பிர்லோ தனது 16 வயதில் கால்பந்து அரங்கில் காலடி எடுத்து வைத்தார். ஏ.சி.மிலன் கிளப் அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். கடந்த 2006 ம் ஆண்டு இத்தாலி அணி, உலககோப்பை வெல்ல இவரது பங்கும் முக்கியமானதாக அமைந்தது. தூரத்திலிருந்து மிக துல்லியமாக கோல் அடிக்கும் திறமை பெற்ற இவர், இந்த முறையும் அசத்த காத்திருக்கிறார்.
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-30
மோரிமோடோ (ஜப்பான்)
ஆசிய அணியான ஜப்பான் சார்பில் சாதிக்க காத்திருக்கிறார் மோரிமோடோ. ஆசியாவின் சிறந்த இளம் வீரராக வலம் வரும் இவர், பெனால்டி ஏரியாவில் திறமையாக ஆடக் கூடியவர். 22 வயதான இவர், ஜப்பான் லீக் போட்டிகளில் மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
இவரது உருவம், எடை, செயல்பாடுகள் ஆகியவை பிரேசிலின் ரொனால்டோவை ஒத்திருப்பதால், இவர் "ஜப்பான ரொனால்டோ' என அழைக்கப்படுகிறார். முதல் முறையாக
உலககோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இவர், ஜப்பான் அணிக்கு கைகொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கிளின்ட் டெம்ப்சே (அமெரிக்கா)
அமெரிக்க அணியின் முன்னணி வீரர்களில் டெம்ப்சேவுக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 2006 ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலககோப்பை தொடரில், அமெரிக்கா தரப்பில் கோல் அடித்த ஒரே வீரர் இவர் தான். நடுக்கள வீரரான இவர், அதிரடியாக ஆடக் கூடியவர். பல்காம் கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர், மைதானத்தில் துடிப்புடன் செயல்படக் கூடியவர்.
அமெரிக்கா சார்பில் 62 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 18 கோல்கள் அடித்துள்ளார். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இவர், அமெரிக்கா உலககோப்பை தொடருக்கு முன்னேற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
உலககோப்பை -ஒரு முறை (2006), கோல்-1, வயது-27
0 comments:
Post a Comment