சாதித்து காட்டுவாரா ரெய்னா?

ஜிம்பாப்வேயில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொகடரில், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது. 

தோனி, சச்சின், சேவக் உள்ளிட்ட "சீனியர்'களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து காட்ட வேண்டும். 

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக இலங்கை கலந்து கொள்கிறது. இதனையடுத்து நடக்க உள்ள 2 போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. 

முன்னணிகள் இல்லை: இத்தொடருக்கு இரண்டாம் தர இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சச்சின், சேவக், யுவராஜ், தோனி, காம்பிர், ஹர்பஜன், நெஹ்ரா, ஜாகிர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

தோனி இல்லாததால் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக விராத் கோஹ்லி செயல்பட உள்ளார். 

இளமை அசத்தல்: இந்த முறை அணியில் இடம் பெற்றுள்ள அனைவருமே இளம் வீரர்கள் தான். பேட்டிங்கில் ரெய்னா, கோஹ்லி, முரளிவிஜய், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், யூசுப் பதான் அசத்த உள்ளனர். சமீபத்தில் நடந்த "டுவென்டி-20' உலககோப்பையில் சொதப்பிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்த முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். 

நமன் ஓஜா, பங்கஜ் சிங், அஸ்வின், உமேஷ் யாதவ், வினய் குமார் ஆகியோர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் முதன் முறையாக காலடி வைக்க உள்ளனர். இது குறித்து கேப்டன் ரெய்னா கூறுகையில்,"" அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பெரும்பாலானோர் சர்வதேச போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாதவர்கள். கிடைத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார். 

இலங்கை மிரட்டல்: இலங்கை அணியிலும் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சங்ககரா, ஜெயசூர்யா, ஜெயவர்தனா, மலிங்கா, முரளிதரன் ஆகியோர் இடம் பெறவில்லை. கேப்டன் பொறுப்பை தில்ஷன் ஏற்றுள்ளார். தரங்கா, மாத்யூஸ், சமர சில்வா, மெண்டிஸ், குலசேகரா, பெர்னாண்டோ, கபுகேதரா, பெரேரா ஆகியோர் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர்.

ஜிம்பாப்வே நம்பிக்கை: சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. சிகும்பரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தைபு, கவன்ட்ரி, பிளிக்நாட், மசகட்சா, சிபாபா என முன்னணி வீரர்கள் சாதிக்க காத்திருக்கின்றனர். மோபு, சிபாண்டா, பிரண்டன் டெய்லர், பிரைஸ், உத்சேயா ஆகியோரது பந்து வீச்சு, இந்திய, இலங்கை அணிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

யாருக்கு வெற்றி?: முத்தரப்பு தொடரை பொறுத்த வரை, இந்தியா, இலங்கை அணிகள் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரண்டாம் தர அணிகளே இத்தொடரில் பங்கேற்க உள்ளதால், ஜிம்பாப்வே அணி, அதிர்ச்சி அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.


மூன்றாவது முறை
 இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இதற்கு முன், 2 முறை (1998, 2000) முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதியுள்ளன. இதில் முதல் முறை இந்தியாவும், இரண்டாவது முறை இலங்கையும் கோப்பை வென்றுள்ளன. தற்போது மூன்றாவது முறையாக இந்த மூன்று அணிகளும் முத்தரப்பு தொடரில் பங்கேற்கின்றன. 

0 comments:

Post a Comment