பேட் மீது வேசலின் தடவினாரா லட்சுமண்?

நாட்டிங்காம் டெஸ்டில், இந்திய வீரர் லட்சுமண் தனது பேட்டில் "வேசலின்' தடவியிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. "அவுட்' தொடர்பான "ஹாட் ஸ்பாட்' முறையில் இருந்து தப்பிக்க, இத்தகைய தந்திரத்தை கையாண்டிருக்கலாம் என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

நாட்டிங்காமில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் இன்னிங்சின் 23வது ஓவரில், ஆண்டர்சன் வீசிய பந்து, லட்சுமண் "பேட்டை' உரசிச் சென்றது. அதனை மிகவும் தாழ்வாக பிடித்த விக்கெட் கீப்பர் பிரையர் "அவுட்' கேட்டார்.

ஆனால், களத்தில் இருந்த பாகிஸ்தான் அம்பயர் அசாத் ராப் "அவுட்' தர மறுத்தார். உடனே அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை முறையில், இங்கிலாந்து வீரர்கள் "அப்பீல்' செய்தனர். மூன்றாவது அம்பயராக இருந்த பில்லி பவுடன் "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தார்.

இதில், பந்து லட்சுமண் "பேட்டில்' பட்டுச் சென்றது உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து பவுடனும் "அவுட்' இல்லை என்று அறிவித்தார். அப்போது 27 ரன்கள் எடுத்திருந்த லட்சுமண், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் கடந்தார்.


குறை உண்டு:

பொதுவாக "ஹாட் ஸ்பாட்' முறையில் நிறைய குறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. "பேட்' மீது வேசலின்(முகத்தில் பூசும் ஒருவகை கிரீம்) அல்லது திரவத்திலான ஏதாவது தைலத்தை வீரர்கள் தடவியிருந்தால், இந்த முறையில் இருந்து தப்பி விடலாம் என கூறப்படுகிறது. இதே போல லட்சுமணும் "வேசலின்' தடவியிருக்கலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வான் தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,""லட்சுமண் தனது பேட்டின் நுனிப்பகுதியில் "வேசலின்' தடவியிருந்ததால் தான் தப்பினாரோ? என,'' கேள்வி எழுப்பியுள்ளார்.


மீண்டும் சர்ச்சை:

இவரது இந்த கருத்து இரு நாடுகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இரண்டாவது முறையாக "வேசலின்' பிரச்னையை கிளப்பியுள்ளது. இதற்கு முன் 1976-77ல் டில்லியில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜான் லீவர் விக்கெட் மழை பொழிந்தார். அதிக "ஸ்விங்' கிடைக்க இவர் பந்தில் "வேசலின்' தடவியதாக இந்தியாவின் பிஷன் சிங் பேடி அப்போது குற்றம்சாட்டினார்.

இப்போட்டி நடக்கும் நாட்டிங்காம் மைதானத்தில் ஏற்கனவே சர்ச்சை எழுந்துள்ளது. இங்கு 2007ல் இந்திய வீரர் ஜாகிர் கான் "பேட்டிங்' செய்ய வந்த போது ஆடுகளத்தில் "பெல்லி பீன்ஸ்' மிட்டாயை இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே எறிந்ததால் பிரச்னை ஏற்பட்டது.

இப்போட்டியில் ஆக்ரோஷமாக பந்துவீசிய ஸ்ரீசாந்த், இங்கிலாந்தின் பீட்டர்சன், கோலிங்வுட், மைக்கேல் வானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது லட்சுமண் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


ஆய்வு செய்த பிராட்

இப்பிரச்னை குறித்து இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில்,""இந்த சம்பவத்தின் போது லட்சுமண் "பேட்' அருகே சென்று ஆய்வு செய்தேன். அதன் மீது "வேசலின்' அல்லது வேறு எந்த ஒரு திரவமும் தடவப்படவில்லை. "ஹாட் ஸ்பாட்' முறையில் தான் குறை உள்ளது. "பேட்' மீது பந்து மிகவும் லேசாக படும்பட்சத்தில், அதனை "ஹாட் ஸ்பாட்' முறையில் உறுதி செய்ய முடியவில்லை,''என்றார்.


"ஹாட் ஸ்பாட்' தெரியுமா?

அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை(டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையில் "ஹாட் ஸ்பாட்' நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி ஆடுகளத்தின் இரு புறமும் "இன்பிரா ரெட் கேமரா' பொருத்தப்படும்.

இதில் போட்டியின் ஒவ்வொரு அசைவும் படம் பிடிக்கப்படும். இவை கறுப்பு வெள்ளை "நெகடிவ்' படங்களாக "கம்ப்யூட்டரில்' பதிவு செய்யப்படும். பந்து பேட்டின் மீது படும் போது, அந்த இடம் மட்டும் வெள்ளையாக தெரியும். இதை வைத்து "அவுட்' என்பதை உறுதி செய்யலாம்.

இந்த தொழில்நுட்பத்தை பிரான்ஸ் விஞ்ஞானி நிக்கோலஸ் பியான் கண்டுபிடித்தார். இது, ராணுவத்தில் ஜெட் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் செல்லும் திசையை கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது.

கிரிக்கெட்டில் முதன் முதலாக 2006-07ல் நடந்த ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டது. இந்த "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment