யுவராஜ், ஹர்பஜன் அதிரடி நீக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து, காயம் காரணமாக யுவராஜ் சிங், ஹர்பஜன் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக விராத் கோஹ்லி, பிரக்யான் ஓஜா வாய்ப்பு பெற்றனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வெற்றி கண்ட இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.


மோசமான "பார்ம்':

இந்நிலையில் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், அடிவயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்படுகிறார். கடந்த இரண்டு டெஸ்டில் இவர் இரண்டு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.

எனவே காயத்தை காட்டிலும் மோசமான "பார்ம்' காரணமாகவே இவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக பிரக்யான் ஓஜா இடம் பெறுகிறார்.


யுவராஜ் பாதிப்பு:

இதேபோல "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், இரண்டாவது டெஸ்டின் போது காயமடைந்தார். இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் பிரஸ்னன் வீசிய "பவுன்சர்', இவரது இடதுகை ஆள்காட்டி விரலை தாக்கியதால் காயம் ஏற்பட்டது.

இதனால் இவரும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக விராத் கோஹ்லி இடம் பெறுகிறார்.


யாருக்கு வாய்ப்பு?:

இங்கிலாந்துக்கு எதிராக வரும் 10ம் தேதி பர்மிங்காமில் துவங்க உள்ள மூன்றாவது டெஸ்டில் சுழற்பந்துவீச்சாளராக களமிறங்க அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா இருவரிடையே கடுமையான போட்டி ஏற்படலாம்.

இதில் அமித் மிஸ்ராவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை "பவுன்சர்' பந்தில் திணறிவரும் சுரேஷ் ரெய்னா நீக்கப்படும் பட்சத்தில், விராத் கோஹ்லி வாய்ப்பு பெறலாம்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலாளர் சீனிவாசன் கூறுகையில்,

""ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய நீண்ட நாட்கள் தேவைப்படும். இதனால் இவர்கள் அடுத்து வரவுள்ள ஒருநாள் தொடரிலும் முழுமையாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விராத் கோஹ்லி, பிரக்யான் ஓஜா மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் விரைவில் இந்திய அணியினரோடு இணைவார்கள்,'' என்றார்.


காத்திருக்க வேண்டும்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும் விளையாடும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் நூறு போட்டிகளில் விளையாடிய பெருமை கிடைத்திருக்கும்.

ஆனால் இவர் தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து, 100 என்ற மைல்கல்லை எட்ட இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடர் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தொடரும் காயம்

இங்கிலாந்து தொடரில், இந்திய வீரர்கள் காயமடைவது தொடர்கிறது.

1. காம்பிர் இடது முழங்கை (மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கலாம்)
2. சேவக் தோள்பட்டை (மூன்றாவது டெஸ்டில் விளையாடுகிறார்)
3. ஜாகிர் கான் தொடையின் பின்பகுதி (இன்னும் தேறவில்லை)
4. யுவராஜ் சிங் இடது கை விரல் (தொடரில் இருந்து நீக்கம்)
5. ஹர்பஜன் சிங் அடிவயிற்றுப் பகுதி (தொடரில் இருந்து நீக்கம்)
6. சச்சின் வைரஸ் காய்ச்சல் (மீண்டுள்ளார்)

0 comments:

Post a Comment