ஒருநாள் அணியில் மீண்டும் டிராவிட்

இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20', ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில், எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் ராகுல் டிராவிட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். "சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி, ஆக. 31ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. பின் செப்டம்பர் 3 முதல் 16ம் தேதி வரை, 5 ஒருநாள் போட்டிகள் நடக்கிறது.

இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதத்தில், இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காத டிராவிட் (38), தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் டிராவிட். பின் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக செயல்பட்டதை அடுத்து, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் 2009ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அணியில் சேர்க்கப்பட்டார்.


மீண்டும் நீக்கம்:

இத்தொடருக்குப் பின் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்ட இவரை, சமீபத்தில் முடிந்த உலக கோப்பை அணியில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய ஜமைக்கா (வெஸ்ட் இண்டீஸ்) டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ், நாட்டிங்காம் டெஸ்டில், அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார் டிராவிட்.

ஆனால், மற்ற இளம் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்புகின்றனர். இதையடுத்து வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில், நிலையில்லாமல் இருக்கும் இந்திய அணியின் பேட்டிங்கை நிலைப்படுத்த, மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பு தேடிவந்துள்ளது.


ஹர்பஜன் நீக்கம்:

வயிற்று பிடிப்பு காரணமாக தற்போதைய டெஸ்ட் தொடரில் இருந்து சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டார். தவிர, சமீபகாலமாக "பார்ம்' இல்லாமல் தவித்து வரும் இவர், அடுத்து வரும் "டுவென்டி-20', ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.


துணைக் கேப்டன்:

இதேபோல, கைவிரலில் காயம் அடைந்த யுவராஜ் சிங்கிற்கு, எஞ்சியுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு தரப்பட்டுள்ளது. கேப்டன் தோனி தலைமையிலான அணியில் சேவக்கிற்கு துணைக் கேப்டன் அந்தஸ்து தரப்பட்டுள்ளது. இவர்களுடன் சச்சின், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, பார்த்திவ் படேலும் அணியில் இடம் பெற்றனர்.


அஷ்வினுக்கு இடம்:

வேகப்பந்து வீச்சாளர் பிரிவில் ஜாகிர் கான், பிரவீண் குமார், முனாப் படேல், ஜாகிர் கான் ஆகியோருடன் இம்முறை வினய் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக தமிழகத்தின் அஷ்வின், அமித் மிஸ்ரா தேர்வாகினர்.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக் (துணைக் கேப்டன்), காம்பிர், டிராவிட், சச்சின், விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா, ஜாகிர் கான், அஷ்வின், பிரவீண் குமார், முனாப் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, வினய் குமார் மற்றும் பார்த்திவ் படேல்.


ஆறு பேர் "அவுட்'

சமீபத்தில் முடிந்த உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருந்த, ஆறு பேர் இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்படவில்லை. இதில் யூசுப் பதான், ஸ்ரீசாந்த், பியுஸ் சாவ்லா, ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் பெயர் அணித் தேர்வில் பரிசீலிக்கப்படவில்லை. காயம் காரணமாக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டனர்.


போபராவுக்கு வாய்ப்பு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் மூன்றாவது டெஸ்ட், எட்பாஸ்டனில் நடக்கிறது. இதற்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இருந்து, தோள்பட்டை காயம் காரணமாக டிராட் நீக்கப்பட்டு, ரவி போபரா சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல டிரம்லட் காயம் முழுமையாக குணமடையாததால், கூடுதலாக ஸ்டீபன் பின் இடம்பெற்றார்.


சூழ்நிலைக்கேற்ற முடிவு: ஸ்ரீகாந்த்

இந்திய அணி தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" இங்கிலாந்திலு<ள்ள ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப, தீவிர ஆய்வுக்குப் பின் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. யுவராஜ் சிங் முக்கியமான வீரர்.

காயம் காரணமாக இவர் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் தோற்று இருந்தாலும், அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணியினர் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

0 comments:

Post a Comment