பயிற்சியில் சாதிப்பாரா சேவக்?

இந்தியா மற்றும் நார்தாம்டன்ஷையர் அணிகள் மோதும் இரண்டு நாள் பயிற்சி போட்டி இன்று துவங்குகிறது. இப்போட்டியில் களமிறங்கும் சேவக், ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. லார்ட்ஸ், நாட்டிங்காமில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் வரும் 10ம் தேதி பர்மிங்காமில் துவங்குகிறது.


மீண்டும் சேவக்:

இதற்கு முன் இந்தியா, நார்தாம்டன்ஷையர் அணிகள் இடையிலான இரண்டு நாள் பயிற்சி போட்டி இன்று நார்தாம்டன் நகரில் நடக்கிறது. இதில் துவக்க வீரர் அபினவ் முகுந்த் நீக்கப்பட்டு, அணியின் வழக்கமான துவக்க ஜோடியான சேவக், காம்பிர் இருவரும் மீண்டும் களமிறங்கவுள்ளனர்.

கடந்த ஐ.பி.எல்., தொடரில் காயம் காரணமாக பாதியில் திரும்பிய சேவக், "ஆப்பரேசஷனுக்கு' பின் மீண்டுள்ளார். காம்பிரும் தயாராகிவிட்டார். முதல் இரண்டு போட்டிகளில் மோசமான துவக்கம் கிடைத்த நிலையில், இவர்கள் இந்த பயிற்சி போட்டியை நன்கு பயன்படுத்திக் கொண்டால், இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.

"மிடில் ஆர்டரில்' டிராவிட், லட்சுமணுடன், சச்சின் களமிறங்கலாம். யுவராஜ் இல்லாததால் ரெய்னா வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஜாகிர் வருகை?

கேப்டன் தோனி பேட்டிங்கில் சற்று ஆறுதல் தர முயற்சிக்க வேண்டும். பவுலிங்கில் முதல் டெஸ்டில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் இன்று களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுழலில் அமித் மிஸ்ராவும், தற்போது லண்டனில் உள்ள சர்ரே அணிக்காக விளையாடி வரும் பிரக்யான் ஓஜாவும் இணைந்து பயிற்சி ஆட்டத்தில் சாதிக்க முயற்சித்தால் நல்லது.

நார்தாம்டன்ஷையர் அணியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அசத்திய ஜாக் புரூக்ஸ், டேவிட் மர்பி, கெவின் பார்க்கர், டேவிட் வில்லே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். தவிர, டேவிட் லுகாஸ், ஜேம்ஸ் மிடில்புரூக் ஆகியோரும் அசத்த காத்திருக்கின்றனர்.


பாதுகாப்பு அதிகரிப்பு:

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததால், தற்போது நார்தாம்டன் நகரில் தங்கியுள்ள இந்திய அணியினருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நாட்டிங்காம் போட்டியில் தோற்ற போது, அங்குள்ள இந்தியர்கள், வீரர்களுக்கு தொல்லையளிக்கும் வகையில் நடந்துள்ளனர். இதனால், இம்முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மழை வரும்

ஏற்கனவே இரண்டு தோல்விகளுடன் உள்ள இந்திய அணி, பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில், போட்டி நடக்கும் இரண்டு நாளும் மழை வருவதற்கு 30 சதவீதம் வாய்ப்புள்ளது. தவிர, இன்றைய போட்டியும் தாமதமாக துவங்கப்படும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment