மூன்றாவது டெஸ்ட்: சேவக், காம்பிர் ரெடி

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாதிக்க, இந்திய அணி முழுபலத்துடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட அதிரடி துவக்க வீரர் சேவக், காம்பிர் அணியில் இடம் பெற உள்ளனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி 0-2 என பின்தங்கி உள்ளது. இதற்கு சேவக், காம்பிர், ஜாகிர் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் முக்கிய காரணமாக அமைந்தது.


மோசமான துவக்கம்:

தோள் பட்டை காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத சேவக், இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் முதல் டெஸ்டில் காம்பிருடன், அபினவ் முகுந்த் துவக்க வீரராக களமிறங்கினார்.

லார்ட்ஸ் டெஸ்டில் பீல்டிங்கின் போது வலது முழங்கையில் காயமடைந்த காம்பிர், இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் நாட்டிங்காம் டெஸ்டில் அபினவ் முகுந்துடன், டிராவிட் துவக்க வீரராக களமிறங்கினார். முதலிரண்டு டெஸ்டிலும் இந்திய துவக்க ஜோடிகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.


பயிற்சியில் சேவக்:

இந்நிலையில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட அதிரடி துவக்க வீரர் சேவக், இன்று இந்திய அணியினரோடு இணைய உள்ளார். இவரது வருகையால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அசுர பலமடைந்துள்ளது. இவர், வரும் 5ம் தேதி துவங்கவுள்ள நார்தம்டன்ஷயர் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடுவார் எனத் தெரிகிறது.


காம்பிர் தயார்:

இதேபோல லார்ட்ஸ் டெஸ்டில், பீல்டிங்கின் போது வலது முழங்கையில் காயமடைந்த மற்றொரு இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர், நாட்டிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. தற்போது காயம் குணமடைந்த நிலையில் முழுஉடற்தகுதி பெற்றுள்ள இவர், வரும் 10ம் தேதி பர்மிங்காமில் துவங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் விளையாட உள்ளார்.

இதன்மூலம் நீண்ட இடைவேளைக்கு பின் சேவக்-காம்பிர் ஜோடி டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்க உள்ளது.


ஜாகிர் எதிர்பார்ப்பு:

லார்ட்ஸ் டெஸ்டின் போது, தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் பாதியில் விலகினார். காயம் குணமடையாததால் இவர், இரண்டாவது டெஸ்டிலும் பங்கேற்கவில்லை.

தற்போது லேசான பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர், வரும் 5ம் தேதி துவக்கவுள்ள இரண்டு நாள் பயிற்சி போட்டியில் தனது உடற்தகுதியை நிரூபித்து, மூன்றாவது டெஸ்டில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவக், காம்பிர், ஜாகிர் கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில், மீதமுள்ள இரண்டு டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment